தேர்வுக்கு நேரா வரணுமா? மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமெரிக்கன் பல்கலை. மாணவர்கள்
மதுரை: மதுரையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்த மாணவர்கள் தேர்வை நேரடியாக எழுதச் சொன்னதால் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து செமஸ்டர் தேர்வுகளை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக அமெரிக்கன் பல்கலை. நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
Recommended Video
கெரோனா அச்சம் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஆன்லைனில் வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தைப் போலவே தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என மதுரை அமெரிக்கன் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டதால் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது மதுரை அமெரிக்கன் பல்கலைக் கழகத்தில் இன்று செமஸ்டர் தேர்வுகளுக்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. ஆனால் இதுநாள் வரை ஆன்லைனில் படித்து வந்த மாணவர்கள் பரிட்சை மட்டும் நேரடியாக எழுதவேண்டுமா என கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி ஒரு தரப்பு மாணவர்கள் இன்று நடைபெற இருந்த தேர்வையே புறக்கணித்து விட்டனர்.
இதனால் அமெரிக்கன் பல்கலை. நிர்வாகம் இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே மற்றொரு தரப்பினர் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். நேரடித் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் முழக்கங்கள் எழுப்பிய மாணவர்கள் இதுநாள் வரை பங்கேற்ற ஆன்லைன் வகுப்பால் பாடத்தில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாகவும், எனவே இந்த ஒரு முறை மட்டும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த பல்கலைக் கழகம் சம்மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தினமும் கல்லூரிக்கு வந்தால்தான் பாடங்கள் குறித்த சந்தேகங்களை பேராசிரியர்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்த மாணவர்கள், இப்போது கல்லூரிக்கு நேரடியாக வருவதால் இனி வரும் காலங்களில் தேர்வையும் நேரடியாக எழுத முடியும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே மாணவர்கள் போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றதாலும், ஊடக வெளிச்சத்திற்கும் சென்றதாலும் செமஸ்டர் தேர்வுகளை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக அமெரிக்கன் பல்கலை. நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதனை அடுத்து மாணவர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றதாக தெரிகிறது.
ஆன்லைன் தேர்வுக்கும் நேரடித் தேர்வுக்கு என்ன வித்தியாசம், இதற்காக ஏன் மாணவர்கள் போராடுகிறார்கள், ஒருவேளை ஆன்லைன் தேர்வுகள் புத்தகத்தை பார்த்து எழுத வசதியாக இருக்குமா என்ற பொதுமக்களின் கேள்விக்கெல்லாம் விடை அவர்களிடமே பின்னர் கேட்டுத் தெரிந்துக் கொள்வதுதான் சால சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
