மகாராஷ்டிரா மாடல்! ஏன் தமிழகத்தில் ஃபாலோ செய்ய கூடாது? லண்டன் தேம்ஸ் நதியை சுட்டிக் காட்டிய ஹைகோர்ட்
மதுரை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நீர் நிலைகளில் டக்வீட் தாவர வகைகளை போட்டு வைக்கின்றனர், இவை கழிவுகளை உறிஞ்சி விட்டு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது, இது போன்று தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், நீர் நிலைகளில் ஏன் பயன்படுத்த கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதா? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித் துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நதிகளை தூய்மைபடுத்த தமிழக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு. அதில் தாமிரபரணி ஆற்றை தூய்மை படுத்த எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தாமிரபரணி யில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் தூய்மையாக வைத்திருக்க , அரசு, மட்டும் நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரின் பொறுப்பு. அங்குள்ள ஒவ்வொரு குடிமகனும் தாமிரபரணியை தூய்மையாக வைத்திருப்பேன் என உறுதி மொழி எடுக்க வேண்டும்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நீர் நிலைகளில், டக் வீட் தாவர வகைகளை போட்டு வைக்கின்றனர். இவை கழிவுகளை உறிஞ்சி விட்டு, ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. இது போன்ற தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், நீர் நிலைகளில் ஏன் பயன்படுத்த கூடாது. லண்டன் தேம்ஸ் ஆறு மிகவும் மோசமாக மாசடைந்து இருந்தது. ஆனால், தற்போது தேம்ஸ் நதி தூய்மையாக உள்ளது. இதே போன்ற திட்டத்தை ஏன் தாமிரபரணி க்கு செயல்படுத்த கூடாது. மத்திய அரசு சார்பில் ஆறுகள் தூய்மை பணி திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆறு தூய்மை பணிக்கு ஏதும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதா?
இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தாமிரபரணி யில் கழிவு நீர் கலப்பதை தடுக்க என்ன என்ன நடவடிக்கை எடுக்க்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, நெல்லை மாநாகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications