தனிஷ்க் கொள்ளை! Burglar Alarm-ஐ off செய்தது யார்? நிஷாந்த்துக்கு கடை ஊழியர் உதவினாரா? மதுரை கமிஷனர்
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு கடை ஊழியர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக மதுரை காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் கடை மூடியிருக்கும் போது நகைகளை யாராவது தொட்டால் எச்சரிக்கை ஒலி அடிக்கும் Burglar Alarm ஸ்விட்ச் ஆன் செய்யாமல் விட்டுவிட்டதால் நிஷாந்த் எளிதாக கொள்ளையடித்துச் சென்றுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 12 ஆம் தேதி மதுரை தனிஷ்க் நகைக் கடையில் 11.384 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து புகாரின் பேரின் காவல் துறை இணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த படையினர் மேற்கொண்ட புலன் விசாரணையில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட 3 பேர், நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளும் மீட்கப்பட்டன.

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த தனிஷ்க் நகைக் கடையை முழுவதுமாக கட்டி முடிக்கப்படாமலேயே துரித கதியில் தொடங்கியிருக்கிறார்கள். அங்கு கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை பயன்படுத்தி குற்றவாளி இந்த கொள்ளையை நிகழ்த்தியிருக்கிறார். அஜாக்கிரதையாக செயல்பட்ட நகைக் கடை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
கடன் தொல்லையால் திருடிய நிஷாந்த்
கடன் தொல்லையால் நகைகளை திருடியதாக நிஷாந்த் தெரிவித்துள்ளார். ஆடம்பரமாக இருப்பதற்காகவும் கொள்ளையடித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் நிஷாந்த் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நிஷாந்துக்கு உதவிய இருவர் கைது செய்யப்பட்டனர். நிஷாந்தை போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா, உதவி செய்திருக்கிறார்களா என்பதை விசாரிக்க வேண்டும்.
கடை ஊழியர்களுக்கு தொடர்பா?
அப்படி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபராக கொள்ளையடித்த நிஷாந்திற்கு கடை ஊழியர்கள் யாரேனும் உதவியிருக்கிறார்களா என்பதை விசாரிக்க வேண்டும். இதுவரை நடந்த விசாரணையில் கடை ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என சொல்ல முடியாது.
மீனாட்சிக்கு தெரிந்தே கொள்ளை
நிஷாந்த் கொள்ளையடித்த விவரம் மீனாட்சிக்கு தெரிந்திருக்கிறது. களவு போன நகைகள் எங்கே இருக்கு என்பதும் அவருக்கு தெரிந்திருக்கிறது. மீனாட்சியின் தொலைபேசி உரையாடலை வைத்து கண்டுபிடித்தோம். நிஷாந்த் கைது செய்யப்பட்ட போது அவரிடம் எந்த நகைகளும் இல்லை. எஃப்ஐஆர் போட வேண்டும் என்பதற்காக 15 முதல் 18 கிலோ நகைகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
11.384 கிலோ நகைகள் கொள்ளை
பிறகு கடையில் உள்ள நகை இருப்பில் இருந்து ஒவ்வொரு நகைகளின் எடையையும் கழித்து பார்த்த போது காணாமல் போனது 11.384 கிலோ என தெரியவந்தது. மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேவைப்பட்டால் முடக்குவோம். இந்த வழக்கில் முக்கிய துப்பு எது என்றால் கடைக்கு சந்தேகிக்கும் படியாக யாரேனும் வந்து சென்றார்களா என்பதை பார்க்கும் போது சிசிடிவியில் ஒரு தகவல் கிடைத்தது.
சிசிடிவி
அந்த சிசிடிவியில் இருந்த சந்தேகிக்கும் நபர் கையில் இருந்த டாட்டூவும் கொள்ளையடித்த நபரின் கையில் இருந்த டாட்டூவும் ஒன்றாக இருந்தது முக்கிய துப்புகளில் ஒன்றாகும். நகைக் கடைகளுக்கு சந்தேகிக்கும் நபர்கள் யார் வந்தாலும் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகை வாங்க வரும் எல்லோரும் நல்லவர்கள் கிடையாது.
அலாரம் ஸ்விட்ச் ஆஃப்
நகைகளை தொட்டால் அலாரம் அடிக்கும் Burglar Alarm இருந்தது. அதை தனிஷ்க் நகைக் கடையில் ஸ்விட்ச் ஆன் செய்யவில்லை. சிசிடிவி உள்ளே மட்டும் இல்லை, வெளியேவும் வைக்க வேண்டும். நகைக் கடையின் பின்புறம் சிசிடிவி இருந்திருந்தால் குற்றவாளியை பிடிப்பது எளிதாக இருந்திருக்கும்.
மீனாட்சி வீட்டில் போலீஸை பார்த்ததும் நிஷாந்த் தலைமறைவு
நகைகளை வைத்துக் கொண்டு இரவு முழுவதும் அவர் சுற்றிய போது ரோந்து படையினரிடம் சிக்காமல் இருந்தது காவல் துறையின் தோல்வி என சொல்லமுடியாது. அவர் ஒரு ஆளாக போயிருக்கிறார். எல்லா இடங்களிலும் ரோந்து செய்ய முடியாது. குற்றம் நடைபெறக் கூடிய வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் ரோந்து காவலர்கள் உள்ளனர். வாகன சோதனை நடந்திருக்கிறது. ஆனால் இவர் அதில் சிக்காமல் இருக்க வேறு பக்கம் வழியாக சென்றிருக்கலாம். மீனாட்சி வீட்டில் போலீஸ் இருந்ததை வைத்து அடுத்த நாள் தான் தப்பித்ததாக நிஷாந்த் தெரிவித்துள்ளார். இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
