மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா.. சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைதான நிலையில் முடிவு
மதுரை: மதுரை மாநகராட்சியின் திமுக மேயர் இந்திராணி இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் எழுந்தது. ரூ.150 கோடி வரை முறைகேடு செய்ததாக கூறப்பட்டது.
மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது. மேயராக இந்திராணி செயல்பட்டு வந்தார். இவரது கணவர் பெயர் பொன்வசந்த். இவர் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர். இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தயவில் பொன்வசந்த் தனது மனைவி இந்திராணிக்கு மேயர் பதவியை பெற்று கொடுத்தார்.

இந்திராணிக்கு அரசியல் முன்அனுபவம் இல்லை. இதனால் அவர் மேயராக தேர்வானது பல சர்ச்சைகளை கிளப்பியது. திமுகவினரில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது மதுரையை எடுத்து கொண்டால் அமைச்சர் மூர்த்தி தனது ஆதரவாளருக்கு மேயர் பதவியை பெற முயற்சித்தார். அது கைக்கூடவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் இந்திராணிக்கும் இடையே முட்டல், மோதல் இருந்து வந்தது.
இதற்கிடையே தான் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 19 பேரை கைது செய்தனர். அதில், மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தும் போலீசில் சிக்கினர். அவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திமுகவில் இருந்து பொன்வசந்த் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
தற்போது பொன் வசந்த் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் திடீரென்று மேயர் இந்திராணி தனது மேயர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கினார். இந்த கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதுரை மாநகராட்சியில் சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் இந்திராணியின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குடும்ப சூழல் காரணமாக தான் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை மாநகராட்சியில் இந்த சொத்து வரி முறைகேடு விவகாரம் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரை மாநகராட்சிக்கு ரூ.370 கோடி வரை சொத்து வரி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே தான் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது. இதனால் கூடுதலாக ரூ.250 கோடி வரை மாநகராட்சிக்கு சொத்து வரியாக கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வளவு வரி கிடைக்கவில்லை.
வரி மதிப்பீட்டை குறைத்து ரூ.150 கோடி வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், மண்டலம் 3 தலைவர் உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் ஆய்வாளர் குமரன், கணினி ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையர் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ், மேயரின் கணவர் பொன்வசந்த் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் மண்டல தலைவர்கள் மீதும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி மண்டல தலைவர்கள் 5 பேர் ராஜினாமா செய்திருந்தனர். இப்போது மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications