தூக்கு மாட்டினாரா? நம்பும்படியா இருக்கு? கழுத்தில் ஊசி தடம்.. டிரைவர் மரணத்தில் வலுக்கும் சந்தேகம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42) உயிரிழந்த விவகாரம், வெறும் தற்கொலை அல்ல; இதில் ஏதோ பெரிய தவறு நடந்துள்ளது என்ற சந்தேகத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்தி வருகிறது. ஆரம்பம் முதலே போலீஸார் சொல்லும் காரணங்களுக்கும், தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.

பேண்ட்டில் தூக்கு மாட்டினாரா? - அப்போதே எழுந்த சந்தேகம்!

சனிக்கிழமை அதிகாலை காவல் நிலையக் கழிப்பறையில் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸார் முதலில் தெரிவித்தனர். ஆனால், அவர் எதைக் கொண்டு தூக்கு மாட்டினார் என்பதிலேயே பெரிய குழப்பம் நீடிக்கிறது.

காவல் நிலையக் கழிப்பறைக்குள் ஒருவரால் எப்படித் தூக்கு மாட்ட முடியும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அவர் அணிந்திருந்த பேண்ட் அல்லது சட்டையைப் பயன்படுத்தித் தூக்கு மாட்டிக்கொண்டதாகக் கூறப்பட்ட தகவலைக் கேட்டு பொதுமக்களும், உறவினர்களும் அப்போதே அதிர்ச்சியடைந்தனர். "என் அப்பா எப்போதும் அரைக்கை சட்டைதான் போடுவார். ஆனால், முழுக்கை சட்டையில் தூக்கு மாட்டினார் என்கிறார்கள். அந்தச் சட்டையைக் காட்டுங்கள் என்று கேட்டால், அது கிழிந்துவிட்டதாகப் போலீஸார் கூறுகிறார்கள்" என பாலகிருஷ்ணனின் மகன் விகாஷ் எழுப்பிய கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை. கழிப்பறையின் உயரம் என்ன, பேண்ட் அல்லது சட்டையை எதில் கட்டித் தொங்கினார் என்ற அடிப்படைக் கேள்விகளே, இது தற்கொலைதானா என்ற சந்தேகத்தை முதலில் விதைத்தன.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமான உண்மைகள்

குடும்பத்தினர் சந்தேகப்பட்டபடியே, தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஒருவர் தானாகத் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டால், அவரது உடலில் எப்படி இத்தனை காயங்கள் வந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது:

பாலகிருஷ்ணனின் முதுகில் 5 வெவ்வேறு இடங்களில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட நீல நிற ரத்தக் கட்டுகள் (காயங்கள்) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்பவரின் முதுகில் 5 இடங்களில் அடிபட்ட காயங்கள் எப்படி உருவாகும்?

அவரது கழுத்தின் வலது பக்கத்தில், கயிறு இறுக்கிய தடயத்திற்கு அருகே ஊசியால் குத்தப்பட்டது போன்ற 3 அடையாளங்கள் காணப்படுகின்றன. காவல் நிலையத்திற்குள் இருந்தவருக்குக் கழுத்தில் ஊசி குத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?

பிரேத பரிசோதனையில் அவரது மூளை மற்றும் இரண்டு நுரையீரல்களும் வீங்கியிருப்பதும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இதயத்தின் வலது அறைகளில் ரத்தம் உறைந்து காணப்பட்டுள்ளது.

கழுத்தில் 27 சென்டிமீட்டர் நீளத்திற்கு இறுக்கப்பட்ட தடம் பதிந்துள்ளது. இது அவராகத் தூக்கு மாட்டியதால் ஏற்பட்டதா அல்லது வேறு யாரேனும் கயிற்றால் இறுக்கியதால் ஏற்பட்டதா என்ற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்புகின்றனர்.

இன்சூரன்ஸ் மோசடியும், மாயமான ஏலக்காயும்!

நவம்பர் 3-ஆம் தேதி வலந்தூர் கண்மாய் அருகே லாரி தீப்பிடித்ததில் 162 ஏலக்காய் மூட்டைகளில் 67 மூட்டைகள் (மதிப்பு ரூ.2.56 கோடி) மாயமானதாகச் சரக்கு நிறுவன மேலாளர் புகார் அளித்திருந்தார். ஆனால், "இன்சூரன்ஸ் பணத்தை அபகரிப்பதற்காக திட்டமிட்டு இந்தத் தீ விபத்து நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றவே, அப்பாவி ஓட்டுநரான என் கணவரைப் போலீஸார் அடித்துத் துன்புறுத்திக் கொன்றுவிட்டார்கள்" என மனைவி சுதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணையில் வெளிவருமா உண்மை?

Madurai Custodial Death

சம்பவம் நடந்த இரவு பாலகிருஷ்ணன் காவல் ஆய்வாளர் அறையில் இருந்து கழிப்பறை நோக்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கு முன்பு விசாரணை என்ற பெயரில் அறைக்குள் என்ன நடந்தது? முதுகில் 5 காயங்கள் ஏற்படும் அளவுக்கு அவரைத் தாக்கியது யார்? கழுத்தில் ஊசி போட்டது யார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி. ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் முத்து உள்ளிட்ட 3 போலீஸாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், உடற்கூராய்வின் போது சேகரிக்கப்பட்ட உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆய்வக முடிவுகள் வெளியாகும் போது, இது தற்கொலையா அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்ட கொலையா என்ற முழு உண்மையும் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+