எய்ம்ஸ், டைடல், விமான நிலையம், மெட்ரோ.. மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டங்களில் தொடரும் இழுபறி!
மதுரை: மதுரையில் எய்ம்ஸ், விமான நிலைய விரிவாக்கம் தொடங்கி மெட்ரோ ரயில் திட்டங்கள் உட்பட தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் சிக்கலுக்கு உள்ளாகி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மதுரையில் தொழிற்சாலைகளோ, வேலைவாய்ப்பை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்களோ இல்லாத சூழலில், மெட்ரோ திட்டமும் நிராகரிக்கப்பட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது.
மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த திட்ட அறிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள்தொகை ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது.

இதனால் மதுரை மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுநாள் வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. சுமார் 9 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கட்டப்பட்டுக் கொண்டே இருப்பது மக்களை சலிப்படைய செய்துள்ளது.
தென் மாவட்டங்கள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. சேலம் உருக்காலை போன்றோ, என்எல்சி போன்றோ எந்தவித தொழிற்சாலையும் மதுரையில் இல்லை. இதனால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகளுக்காக சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மதுரையில் ஐடி நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியமாகி வரும் நிலையில், அதற்கான போக்குவரத்து வசதிகள் கைகூடாமலேயே இருக்கிறது. குறிப்பாக மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. நிலம் கையகப்படுத்தப்பட்டு இதுவரை ஒப்படைக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் 2022ஆம் ஆண்டு டைடல் பார்க் அறிவிப்பு வெளியான போதும், தற்போதுதான் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி மதுரை மாவட்டத்திற்கான திட்டங்கள் மட்டும் தொடர்ந்து இழுபறியிலேயே இருக்கிறது. தற்போது இந்தப் பட்டியலில் மெட்ரோ ரயில் திட்டமும் இணைந்திருக்கிறது. அதேபோல் மாநகராட்சி சார்பாக செய்யப்பட்டு வரும் பல்வேறு பணிகளும் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் மதுரை மாவட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications