மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. மதிமுகவுக்கு செக் வைக்கும் ஸ்டாலின்.. பின்னணியில் பாஜக!
மதுரை: சட்டசபைத் தேர்தலில் மதுரையில் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக மதுரை தெற்கு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்று உள்ளூர் திமுகவினர் பேச தொடங்கியுள்ளனர். இதுகுறித்து விரிவாக பேசலாம்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தென் மாவட்டங்களில் திமுக தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மதுரையில் கூடுதல் தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் ஸ்டாலின் குறியாக உள்ளார். அதற்காகவே திமுகவின் பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தினார்.

அப்போதே அமைச்சர் மூர்த்திக்கு மதுரையில் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து கொடுக்கப்பட்டது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்பி உதயகுமார் ஆகியோரை வீழ்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் திமுக 5 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வென்றன.
இந்த 10 தொகுதிகளில் திமுக 7 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மதுரை தெற்கு தொகுதி மதிமுகவின் பூமிநாதனுக்கும், திருப்பரங்குன்றம் சிபிஎம் கட்சிக்கும், மேலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டன. இதில் திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதியில் அதிமுக வென்றது. மதுரை தெற்கு தொகுதியிலும் பூமிநாதன் குறைந்த வாக்குகளில் வென்றார்.
இந்த நிலையில் 2026 சட்டசபைத் தேர்தலில் மதுரையில் 8 தொகுதிகளில் போட்டியிட திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் எந்தக் கூட்டணி கட்சியிடம் இருந்து தொகுதியை பெறலாம் என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே சிபிஎம், காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய 3 கட்சிகளும் மதுரையில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரி வருகின்றன.
இதுதொடர்பாக திமுகவினரிடம் விசாரிக்கையில், இந்த முறை மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் இருக்கிறது. மதுரை மேற்கு தொகுதி அமைச்சர் மூர்த்தி கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் அந்த தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதி. அதேபோல் எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்ற பட்டியலும் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாக கூறுகின்றனர்.
மதிமுக தரப்பில் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பூமிநாதன் வென்றார். இந்த முறை சொந்த சின்னத்தில் மதிமுக போட்டியிட விரும்பினால், மதுரை தெற்கு தொகுதி அளிக்கப்படாது என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மதுரை தெற்கு தொகுதியில் செளராஷ்டிரா மற்றும் முக்குலத்தோர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், பாஜக போட்டியிட காய் நகர்த்தி வருகிறது. இதனால் திமுக நேரடியாகவே மதுரை தெற்கில் போட்டியிடும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications