பொன்னியின் செல்வன்.. பகை மறவா பாண்டியர் வாரிசுகள் என்ற பெயரில் மதுரையில் ஒரு அலப்பறை போஸ்டர்
மதுரை: பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு மதுரையில் பகை மறவா பாண்டியரின் வாரிசுகள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிற்கால சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து எழுத்தாளர் கல்கி உருவாக்கிய புதினம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் ஆழ்வார்க்கடியார் நம்பியில் தொடங்கி அத்தனை கதா பாத்திரங்களுடனும் ஒன்றிப் போய்விடுவர். இன்றளவும் தமிழ் வாசிப்புச் சூழலில் பொன்னியின் செல்வன் மகத்தான விற்பனைக்குரிய நூலாக இருந்து வருகிறது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது தமிழ்த் திரை உலகின் மிக நீண்டகால முயற்சி. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், நடிகர் கமல்ஹாசன் என பலரும் திரைப்படமாக்க விரும்பிய நாவல் பொன்னியின் செல்வன். இதனை இப்போது சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ்
தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஒரு பெரும் பட்டாளமே இத்திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இரு பாகங்களாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் ரசிகர்கள் மெய் மறந்து போயிருக்கின்றனர்.

பாண்டிய நாட்டு குசும்பு
இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் குசும்பான விவாதங்கள் நடைபெறுகிறது. பொன்னியின் செல்வனின் ஒன்லைன் எனில், பாண்டியர்களுக்கும் சோழர்களுக்குமான யுத்தம் என்பதுதான். ஆகையால் பாண்டிய நாட்டவர் (மதுரை மக்கள்) எப்படி பொன்னியின் செல்வனை ஆதரிக்க முடியும்? என்பது அந்த குசும்பு. இதை முன்வைத்து கருத்து பரிமாற்றங்களும் நடக்கின்றன.

மதுரை அலப்பறை போஸ்டர்
இந்த குசும்புகளின் உச்சம்தான் மதுரை போஸ்டர். மதுரை மாநகரில் பகை மறவா பாண்டியரின் வாரிசுகள் என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.கே.ஆனந்த் என்பவர் ஒட்டியிருக்கும் இப்போஸ்டரில், பாண்டிய நாட்டுக்கு வந்தோமா, மீனாட்சிய கும்பிட்டோமா, தியேட்டர்ல படத்த ஓட்டுனோமா, புரோட்டா திண்டோமானு போய்கிட்டே இருக்கனும்.. அதவிட்டுட்டு மறுபடியும் எதாவது எசக்குபிசக்கா பண்ணனும்னு நினைச்சீங்க- அப்றம் அவ்ளோதான் என்கிறது இந்த போஸ்டர். அதாவது பொன்னியின் செல்வன் சினிமாவை பார்க்க வாங்க என விசித்திரமாக போஸ்டர் அடித்து அலப்பறை செய்திருக்கிறது மதுரை மக்காள் குரூப்!












Click it and Unblock the Notifications