மதுரை நகைக்கடை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் கை காண்பித்த குளத்தில் தோண்ட தோண்ட வந்த நகைகள்!
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியும், நிஷாந்தின் தந்தை சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாடக்குளம் அருகே குளத்தில் வெள்ளை நிற சாக்குப்பையில் நகைகளை புதைத்து வைத்ததாக கூறினர். இதையடுத்து மீனாட்சியை அழைத்து சென்று குழி தோண்டி புதைத்து வைத்து இருந்த நகைகளை போலீசார் தோண்டி எடுத்து கைப்பற்றினர்.
சாக்குப்பையில் புதைத்து வைத்து இருந்த நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தான் கொள்ளையடிக்கப்பட்ட நகையா? முழு நகைகளும் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

9 தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார்
மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில், தனிஷ்க் தங்க நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த 12 ஆம் தேதி முகமூடி அணிந்த நபர்கள் பல கோடி மதிப்பிலான நகைகளை அதாவது 15 கிலோ நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர். தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் எந்த துப்பும் கிடைக்காமல் திணறிய போலீசார், அப்பகுதிகளிள் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து 9 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இதில் சிசிடிவி காட்சியில் சந்தேகப்படும் படியாக ஒருவர் நள்ளிரவில் சாலையில் சென்றது தெரியவந்தது. அவர் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் சென்ற நிலையில் அந்த நபர் யார்?, என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
நிஷாந்த் வீட்டில் சோதனை
இதில் அவர் மதுரை பழங்காதந்தம் வி.கே.பி. நகர் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்த் என்பது தெரியவந்தது. அவரது தந்தை சுரேஷ். நிஷாந்த் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் அடிக்கடி இந்த நகை கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது. அப்போது நகைகள் வாங்குவது போல் கடை ஊழியர்களிடமும் பேசி வந்துள்ளார்.
சில நகைகளை அணிந்து காண்பித்து அதனை இன்ஸ்டாகிராமிலும் போட்டு இருக்கிறார். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது வீட்டில் 50-க்கு மேற்பட்ட போலீசார் நேற்று சோதனை நடத்தினர். மேலும் அவரது பெற்றோரிடமும் விசாரித்தனர். இதில் நிஷாந்த் சென்னை தப்பி சென்றதாக தெரிகிறது. பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் நிஷாந்த் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் பயன்படுத்திய லேப்டாப், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குளத்தில் புதைத்து வைத்ததாக சொன்ன மீனாட்சி
எனினும் கொள்ளையடித்த நகைகளை அவர் எங்கே வைத்து சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மாடக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட ஆடைகளை எரித்து இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக நிஷாந்தின் காதலி என கூறப்படும் மீனாட்சி என்பவரையும், நிஷாந்தின் தந்தை சுரேஷையும் இன்று போலீசார் கைது செய்தனர். இதில் மீனாட்சி இன்ஸ்டா பிரபலம் என்பது தெரியவந்தது.
நிஷாந்தின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது மீனாட்சி சிக்கினார். நகை திருட்டில் ஈடுபட்ட பிறகு நிஷாந்த் மீனாட்சியிடம் போன் செய்து பேசியிருக்கிறார். மேலும் சில நகைகளை அவரிடம் கொடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் தங்க நகைகளை சாக்குப்பையில் அடைத்து மாடக்குளம் வனப்பகுதியில் உள்ள குளத்தில் புதைத்துவிட்டதாக மீனாட்சி கூறியிருக்கிறார்.
சாக்குப்பையை தொண்டி எடுத்த போலீசார்
இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் மீனாட்சியை வாகனத்தில் அழைத்து சென்று அவர் கூறிய இடத்தில் தோண்டி பார்த்தனர். குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த வெள்ளை நிறப் பையை போலீசார் வெளியே எடுத்தனர். இதில் தங்க நகைகள் இருந்தது. எனினும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தானா? முழு நகைகளும் இதில் இருந்ததா? என்பது குறித்து கூறப்படவில்லை. தலைமறைவாக உள்ள நிஷாந்தை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 5 முதல் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




Click it and Unblock the Notifications
