பிடிஆர் vs மூர்த்தி.. மதுரை மேயரை தேர்வு செய்வதில் தடுமாறும் திமுக தலைமை.. என்ன நடக்கிறது?
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியை மாற்றும் விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகிய இரு தரப்பும் வேறு சில பரிந்துரை செய்வதால், என்ன முடிவு எடுக்கலாம் என்று தெரியாமல் திமுக தலைமை அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வாச்ந்த், வரி விதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், 2 உதவி ஆணையர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வரை அவரே தொடர்ந்து வருகிறார்.

மதுரை மாநகராட்சியின் புதிய மேயரை முடிவு செய்யும் பொறுப்பு அமைச்சர் கேஎன் நேரு வசம் திமுக தலைமை ஒப்படைத்திருக்கிறது. இதன்பின் அமைச்சர் கேஎன் நேரு மதுரை மாவட்ட அமைச்சர்களான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோருடனும், மாவட்டச் செயலாளர் தளபதி மற்றும் மணிமாறன் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இந்த ஆலோசனையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஏனென்றால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தளபதி ஆகியோர் 61வது வார்டு கவுன்சிலர் செல்வியை பரிந்துரை செய்துள்ளனர். அமைச்சர் மூர்த்தி தரப்போ முன்னாள் மண்டலத் தலைவர் வாசுகியை பரிந்துரை செய்திருக்கிறார். மாவட்டச் செயலாளர் மணிமாறன் 95வது வார்டு கவுன்சரில் இந்திராகாந்தியை பரிந்துரை செய்திருக்கிறார்.
மதுரை மவட்டத்தின் மேயராக இருந்து வரும் இந்திராணியை மாற்றினால், அவரது சமூகத்தைச் சேர்ந்த செல்வியை புதிய மேயராக கொண்டு வர வேண்டும் என்பதில் பிடிஆர் தரப்பு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே மதுரை மேயராக இந்திராணியை கொண்டு வந்ததும் பிடிஆர் தரப்பு தான். மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மதுரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
அடுத்த சட்டசபைத் தேர்தலில் மதுரையின் முக்கியத் தொகுதி ஒன்றில் போட்டியிட பொன் வசந்த் தீவிரமாக காய்களை நகர்த்தி வந்தார். இந்த விவகாரம் காரணமாக அமைச்சர் மூர்த்தி மற்றும் இந்திராணி தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக மோதல் உச்சத்தை எட்ட, நேரடியாக அமைச்சர் மூர்த்தி திமுக தலைமையிடம் பொன் வசந்த் குறித்து புகார் அளித்தார்.
இதன்பின்னரே பொன் வசந்த் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் மேயரை மாற்றுவதால் மதுரை மாவட்ட திமுகவில் மீண்டும் குளறுபடிகள் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மதுரையில் திமுக மிகப்பெரிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
கடைசி நேரத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டால், அது தேர்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதேபோல் மேயர் மாற்ற விவகாரத்தில் அதிமுகவிடம் முன்பு இருந்த வேகம் இப்போது குறைந்திருக்கிறது. மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்க்கு அதிமுக கவுன்சிலர்களுடனும் நல்ல நட்பு இருந்து வருகிறது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications