நீங்கள் இந்துவான்னு கேட்டாங்க! நமீதாவின் புகாருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் விளக்கம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் என்னை இந்துவா என கேட்டும் ஜாதி சான்றிதழை கேட்டும் அதிகாரிகள் அவமதித்தார்கள் என நடிகை நமீதா குற்றம்சாட்டிய நிலையில் கோயில் நிர்வாகம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா, சினிமாவிலிருந்து விலகி வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில்தான் நடந்தது.

நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இவர் பாஜகவில் முக்கிய பதவியில் இருக்கிறார். தொடர்ந்து எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் நமீதா தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற போது அவமானத்தை சந்தித்ததாக நமீதா வீடியோ மூலம் பரபரப்பு புகாரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் விடவில்லை. என்னை அங்கிருந்த அதிகாரிகள் ஜாதி சான்றிதழ் கேட்டனர்.
நான் இந்துவா என்பதற்கான சான்றிதழையும் கேட்டனர். என் சொந்த நாட்டிலேயே நான் அந்நியமாக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. இதுவரை என்னிடம் யாருமே ஜாதி சான்றிதழை கேட்டதில்லை. நான் இந்துவாக பிறந்தவள். என் குழந்தைகளுக்கும் இந்து பெயரைத்தான் வைத்துள்ளேன்.
அந்த அதிகாரிக்கு எப்படி பேச வேண்டும் என தெரியவில்லை. இது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமீதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கோயில் நிர்வாகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் மீனாட்சி அம்மன் கோயிலின் தெப்பக் குளத்தை தாண்டி ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் அனுமதிப்பது இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது.
பிரபலங்கள் கோயிலுக்கு வரும்போது, சந்தேகம் இருந்தால் கோயில் பணியாளர்கள், அவர்கள் சார்ந்த மதம் குறித்து கேட்பது உண்டு. அந்த வகையில், பணியில் இருந்த பொறுப்பு அதிகாரி, நடிகை நமீதாவிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் கணவர் இந்து, இந்து முறைப்படி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம் என நமீதா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் விஐபி தரிசனம் முடித்து சென்றனர். முக்கிய பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டினர் வரும்போது விசாரிப்பது வழக்கமான நடைமுறையே எனவும் கோயில் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகானவர் நடிகை நமீதா. தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். மச்சான்ஸ் மச்சான்ஸ் என அழைத்து இளசுகளின் கனவு தேவதையாக அவர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். அது போல் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார். இதையடுத்து அவர் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு அவர் பாஜகவில் இணைந்தார். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக தான் தனது கணவருடன் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றதை போல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் சென்றேன் என்றார்.












Click it and Unblock the Notifications