"ஹைதராபாத் போகுது, மாறுது.. போகுது, மாறுது.. ரிப்பீட்டு!" இந்தி திணிப்பு பற்றி சு.வெங்கடேசன் ட்வீட்
மதுரை: இந்தி திணிப்பு ரிப்பீட்டாக நடந்து வருகிறது என்று விமர்சனம் செய்துள்ளார் மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன்.
இதற்கு உதாரணமாக அவர் ரத்த வங்கி வாகனத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் எடுத்துப் போட்டுள்ளார். "இவிங்களுக்கு இதே வேலையா போச்சு.." என்ற தொனியில்தான், இந்தி திணிப்பு விவகாரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வெங்கடேசன்.
அப்படி, என்னதான் நடந்தது.. விஷயத்திற்கு வருவோம்..

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம்
இந்தி திணிப்புக்கு எதிராக 1937ம் ஆண்டே, போராட்டத்தை பார்த்த மாநிலம் தமிழகம். இதன்பிறகு நீறுபூத்த நெருப்பாக இந்த கனல் தமிழர்கள் மனதில் நிலை கொண்டது. எப்போதெல்லாம் இந்தி திணிப்பு நடக்கிறதோ அப்போதெல்லாம் அது தீப்பிழம்பாக வெளிப்பட்டது வரலாறு. பிற்காலத்தில் திமுக இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது. 1965ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு, காவல்துறையை வைத்து ஒடுக்க முற்பட்டபோது பரிபோன உயிர்கள் எண்ணிக்கை மட்டும் 70-ஐத் தாண்டியது. இந்த போராட்டம், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கே வித்திட்டது. 1967ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. அத்தோடு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கனவு மறைந்தும்போனது. இன்று வரை காங்கிரசால் தமிழகத்தில் எழ முடியாமல் போனதற்கு அப்போது விழுந்த பெரும் இடி போன்ற இந்த அடிதான் காரணம்.

அடுத்தடுத்து புகார்கள்
இந்த நிலையில்தான், மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு அவ்வப்போது இந்தி திணிப்பு பிரச்சினை வெடிக்க ஆரம்பித்தது. கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என, எங்கும் இந்தி எதிலும் இந்தி என்ற கொள்கையால், தேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பது பாஜக தரப்பினர் பதிலாக இருந்தால், ஒற்றுமையை குலைக்கத்தான் இது பயன்படும் என்பது எதிர்க்கட்சியினர் விமர்சனமாக இருந்து வருகிறது.

சு.வெங்கடேசன் ட்வீட்
இந்த நிலையில்தான், எம்.பி. சு.வெங்கடேசன் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய அரசின் NACO திட்டங்களின் கீழ் இரத்த வங்கி வாகனம் பராமரிப்பு பணிக்காக ஹைதராபாத் அனுப்பப்படுகிறது. பராமரிப்பு முடிந்து வரும் போது தமிழ் எழுத்துக்கள் இந்தியாக மாற்றப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு, பராமரிப்பு முடிந்து ஹிந்தி எழுதப்பட்டு வந்த வாகனத்தில் மீண்டும் தமிழ் எழுதப்பட்டது. இந்தி திணிப்பு எனும் கசடுகளை அகற்ற தொடர்ந்து பராமரிப்பு பணியினை மேற்கொள்வோம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரிப்பீட்டு
அவர்கள் இந்தியில் எழுதி அனுப்புவதும், இவர்கள் தமிழில் எழுதி மாற்றுவதும் வாடிக்கையாக இருக்கிறது என்பதுதான் சு.வெங்கடேசன் பதிவின் சாராம்சமாக உள்ளது. வெங்கடேசன் பதிவில் பின்னூட்டமிடும் நெட்டிசன்கள் பலரும், ரயில்வே துறைதான் இந்தி மயத்திற்கு அதிகம் அடிகோலுகிறது என்று குமுறுவதை கவனிக்க முடிகிறது.












Click it and Unblock the Notifications