திமுகவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்போம்.. கார்கேவிடம் கூறிவிட்டேன்! கொந்தளிக்கும் மாணிக்கம் தாகூர்
மதுரை: திமுகவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப் பெறுவோம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் தெரிவித்துள்ளார். மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப் பெற மல்லிகார்ஜுன கார்கேவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறிய மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சிக்காரனுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மதுரையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி பேசுகையில், இந்தியா கூட்டணி இணக்கமாக இருப்பதற்கு காரணமே திமுக தான். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி கூட அமைக்க முடியவில்லை. அடுத்த முறை மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோருக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று கூறி இருந்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தன்மானம் காக்க மதுரை வடக்கு தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசுவேன் என்று மாணிக்கம் தாகூர் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது திமுகவினரை கொந்தளிக்க செய்திருக்கிறது.
மாணிக்கம் தாகூர் தனது மாமனாரை மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் தலைமையிடம் பேசி காய் நகர்த்தி வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து மாணிக்கம் தாகூர் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி நிச்சயமாக கேட்கும்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வலியுறுத்தி உள்ளேன். காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ, காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் இழிவாக பேசுகிறார்களோ, அவர்களிடம் எந்தவொரு தயவு தாட்சண்யமும் பார்க்க போவதில்லை. எங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தன்மானம் மிகவும் முக்கியமானது.
காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வந்தே மாதம் என்று மட்டும் சொல்ல தெரியும் என்று நினைக்காதீர்கள்.. திருப்பி அடிக்கவும் தெரியும்.. காங்கிரஸ் குறித்து பேசிய திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மாணிக்கம் தாகூரின் பேச்சால், மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கும் சிக்கல் வரலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications