கல்வி தாய்.. மதுரை ஆயி பூர்ணம் அம்மாளுக்கு குடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கிய சிறப்பு விருது
மதுரை: தனக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தானமாக அளித்த மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த பூர்ணம் அம்மாளுக்கு குடியரசு தின விழாவில் முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் அம்மாள். இவரது கணவர் உக்கிர பாண்டியன் கனரா வங்கியில் வேலைபார்த்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானார். மகள் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார் பூரணம் அம்மாள். கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இந்த செய்தி வேகமாக பரவிய நிலையில் பலரும் பூரணம் அம்மாளை பாராட்டினார்கள்.
பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கியதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அப்போது வெகுவாக பாராட்டினார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் வெகுவாக பாராட்டினார். முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், "கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்." என்று அறிவித்திருந்தார்.
அதன்படியே மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த பூர்ணம் அம்மாளுக்கு குடியரசு தின விழாவில் முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக நிலத்தை தானமாக வழங்கிய ஆயி என்கிற பூரணம் அம்மாளை அரசின் சார்பில் தேடி போய் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications