ட்விஸ்ட்! 3 போஸ்ட்கள் டெலிட், 6 பேர் அன்ஃபாலோ.. தனிஷ்க் மீனாட்சி இன்ஸ்டா ஐடியில் தடயங்கள் அழிப்பு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, ஒவ்வொரு நாளும் புதிய மர்மங்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான 25 வயது யூடியூபர் நிஷாந்தைப் பிடிக்க 9 தனிப்படை போலீசார் கேரளா உட்படப் பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் தற்போது அவர் கைதாகி உள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

crime

சிறைக்குள் இருக்கும் மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் நடந்து வரும் சில ரகசிய மாற்றங்கள் இப்போது இணையவாசிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

சிறையில் மீனாட்சி.. ஆனால் இன்ஸ்டாவில் நடக்கும் மாற்றங்கள்

மீனாட்சி கைது செய்யப்பட்ட பிறகு, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கானோர் உற்று நோக்கி வருகின்றனர். ஆனால், மீனாட்சி போலீஸ் காவலில் இருந்து சிறைக்குச் சென்ற பிறகும், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக, மீனாட்சி கைதான பிறகு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து 3-க்கும் மேற்பட்ட பதிவுகள் திடீரென நீக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அவர் பின்தொடர்ந்து வந்த 6 பேரை அந்தக் கணக்கிலிருந்து அன்ஃபாலோ செய்துள்ளனர்.

யார் இயக்குகிறார்கள்? எதற்காகப் பதிவுகள் நீக்கப்பட்டன?

சிறையில் இருக்கும் ஒருவரால் செல்போன் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க, மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டு தெரிந்த அவரது குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்கள் யாரோ ஒருவர் வெளியே இருந்து கொண்டு அந்தக் கணக்கை இயக்கி வருவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "கைது செய்யப்பட்ட பிறகு மீனாட்சியின் கணக்கில் இருந்து 6 பேரை அன்ஃபாலோ செய்திருக்கிறார்கள்; 3 போஸ்ட்களுக்கு மேல் டெலிட் செய்திருக்கிறார்கள். இவ வீட்டில் இருக்கும் யாரோ இன்னும் மீனாட்சியின் ஐடியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக அந்தப் பதிவுகளை அழித்தார்கள்? முக்கியமான ஆதாரங்களை மறைக்கப் பார்க்கிறார்களா? அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்" என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கோபத்தையும் சந்தேகத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

crime

ஆதாரங்களை அழிக்கும் முயற்சியா?

இந்தக் கொள்ளை வழக்கில் சமூக வலைத்தளப் பதிவுகள் போலீசாருக்குப் பல முக்கியத் தடயங்களைக் கொடுத்துள்ளன. ஏற்கனவே நிஷாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த மூணாறு பயண வீடியோக்களை வைத்தே, அவர் கேரளாவிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல், மீனாட்சியின் பழைய பதிவுகள் மூலமாகவும், அவர் யாரையெல்லாம் பின்தொடர்ந்தார் என்பதை வைத்தும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த வேறு நபர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், அவரது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அந்தப் பதிவுகளை அவசர அவசரமாக நீக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தீவிரமடையும் போலீஸ் நடவடிக்கை

ஏற்கனவே மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைப் போலீசார் மீட்டுள்ள நிலையில், மீதமுள்ள நகைகளை மீட்கவும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்போது மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து தடயங்கள் அழிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் கவனத்தில் எடுத்து விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+