தனிஷ்க் கொள்ளை.. மீனாட்சியின் இன்ஸ்ட்டா போஸ்ட் பின்னால் இருந்த அந்த போட்டோ! அப்பவே அப்படி போல இவங்க
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த இளம் பெண் ஒருவர், எப்படி இந்த மெகா கொள்ளை வழக்கில் சிக்கினார் என்ற பின்னணி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த மீனாட்சி?
மதுரையைச் சேர்ந்த மீனாட்சி (என்கிற மீனாட்சி நாச்சியார்), இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் மிகவும் பிரபலமானவர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் அழகுசாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தி வந்த இவர், பின்னர் மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களைப் பற்றி ரிவ்யூசெய்யும் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். குறிப்பாக, மில்லியன் கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட 'TechBossIndia' போன்ற பிரபல பக்கங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த வீடியோக்களை எடிட் செய்து கொடுக்கும் வீடியோ எடிட்டராகப் பணியாற்றியவர் தான், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான 25 வயது யூடியூபர் நிஷாந்த். ஒன்றாகப் பணியாற்றியதன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
வைரலாகும் 'மணி ஹெய்ஸ்ட்' போஸ்ட்
மீனாட்சி கைதான பிறகு, அவரது பழைய இன்ஸ்டாகிராம் பதிவுகளை நெட்டிசன்கள் தோண்டி எடுத்து வருகின்றனர். அதில், உலகப் புகழ்பெற்ற மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் முக்கியக் கதாபாத்திரமான புரொபசர் புகைப்படத்தை மீனாட்சி தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தது இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வங்கிகளையும், கஜானாக்களையும் துல்லியமாகத் திட்டமிட்டுக் கொள்ளையடிப்பதைக் கதையாகக் கொண்ட அந்த சீரிஸின் மீது மீனாட்சிக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. சினிமா மற்றும் வெப் சீரிஸ்களில் வருவது போல, யாரும் சந்தேகப்படாத வகையில் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நகைக்கடையைக் கொள்ளையடிக்க இதுவே அவருக்குத் தூண்டுதலாக இருந்திருக்குமோ என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.
கடனும், சொந்த வீடு கட்டும் ஆசையும்
போலீசாரின் விசாரணையில் மீனாட்சி கொள்ளைக்குத் துணை போனதற்கான முக்கியக் காரணம் தெரியவந்துள்ளது. மீனாட்சிக்கு அதிக அளவில் கடன் இருந்ததாகவும், தனக்கென ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காகப் பெருந்தொகை தேவைப்பட்டதால், தனது நெருங்கிய நண்பர் நிஷாந்திடம் இதுபற்றிக் கூறி மீனாட்சி அழுதுள்ளார்.
காதலியின் கஷ்டத்தைப் போக்க நினைத்த நிஷாந்த், நகைக்கடையைக் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மீனாட்சியின் இருசக்கர வாகனத்திலேயே சென்று நகைக்கடையை நோட்டமிட்டதுடன், கொள்ளையடித்த இரவிலும் அதே பைக்கைப் பயன்படுத்தியுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே மறைத்து வைக்கப்பட்டன என்ற முழு விவரமும் மீனாட்சிக்குத் தெரிந்திருந்தது.
திருப்பூரில் தலைமறைவாக இருந்த நிஷாந்த், முன்பின் தெரியாத ஒருவரின் செல்போனில் இருந்து மீனாட்சிக்கு அழைத்துப் பேசியதே போலீசாருக்கு முக்கியத் தடயமாக அமைந்தது. அதை வைத்து மீனாட்சியையும், நிஷாந்தின் தந்தை சுரேஷையும் கைது செய்த போலீசார், மீனாட்சி கொடுத்த தகவலின் அடிப்படையில் மாடக்குளம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ நகைகளை மீட்டுள்ளனர். சினிமா பாணியில் திட்டமிட்டுப் பணக்காரராக ஆசைப்பட்ட இன்ஸ்டா பிரபலம், இன்று கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.




Click it and Unblock the Notifications
