தனிஷ்க் கொள்ளை.. நிஷாந்த், மீனாட்சி ஆட்டம் ஓவர்.. மீனாட்சியின் அம்மா பக்கம் திரும்பிய போலீஸ்
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பல திருப்பங்கள் நாளுக்கு நாள் நடந்து வருகின்றன.. இதில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைக்கும் அடுத்தகட்ட திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. இந்த வழக்கில் தற்போது மீனாட்சியின் தாயார் மீதும் போலீசார் கவனத்தை திருப்பி உள்ளனர்.
சினிமா பாணியில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி நிஷாந்த் அளித்த தகவலின் பேரில், கொள்ளையடிக்கப்பட்ட 11.7 கிலோ நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் தாயாரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.

விளாச்சேரி மலை அடிவாரத்தில் பதுக்கிய நகைகள் மீட்பு
கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை, தனிஷ்க் நகைக்கடையின் லிப்ட் அமைக்க வைக்கப்பட்டிருந்த திறந்தவெளி வழியாக உள்ளே இறங்கிய மர்ம நபர், அங்கிருந்த சுமார் 11.7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார்.
இந்த கொள்ளை தமிழ்நாட்டையே உலுக்கியது. ஆனால் இதை போலீசார் 2 நாட்களில் துப்பு துலக்கினர். இந்த வழக்கில் நிஷாந்தின் காதலியும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கண்டுபிடிக்கப்பட்ட தங்கம்
மீனாட்சி அடையாளம் காட்டியதன் பேரில், முதற்கட்டமாக மாடக்குளம் கண்மாய் மற்றும் வயல்வெளிப் பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5.5 கிலோ நகைகளைப் போலீசார் தோண்டி எடுத்தனர்.
மீதமுள்ள நகைகளுடன் தலைமறைவாக இருந்த 25 வயது யூடியூபர் நிஷாந்தை 9 தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் சேஷம்பட்டி அருகே பேருந்தில் தப்பிச் சென்ற அவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். டிரைவர் கொடுத்த க்ளூ மூலம் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
மதுரைக்கு அழைத்து வரப்பட்ட நிஷாந்திடம் தனிப்படை போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மீதமுள்ள நகைகளை மதுரை விளாச்சேரி அருகே உள்ள கோபாலிபுரம் மலை அடிவாரப் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, நிஷாந்தை நேரில் அழைத்துச் சென்ற போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.2 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை நேற்று மீட்டனர். இதன் மூலம், கொள்ளையடிக்கப்பட்ட 11.7 கிலோ நகைகளும் நூறு சதவீதம் முழுமையாக மீட்கப்பட்டு, நகைக்கடை நிர்வாகிகள் முன்னிலையில் எடைபோட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 15 கோடி ஆகும்.
மீனாட்சியின் தாயாரிடமும் போலீஸ் விசாரணை
ஒருபக்கம் முழு நகைகளும் மீட்கப்பட்டுவிட்டாலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் பணியைப் போலீசார் நிறுத்தவில்லை. ஏனென்றால் இவர்கள் செய்திருந்தாலும் திட்டம் பலர் தீட்டி இருக்கலாம்.
குறிப்பாக, கைதான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் தாயார் இந்துவிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே மீனாட்சி சிறைக்குச் சென்ற பிறகு, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து சில பதிவுகள் நீக்கப்பட்டதாகவும், சிலர் அன்ஃபாலோ செய்யப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது. மேலும், மீனாட்சியின் தாயாரும் 'இந்துவின் பயணம்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் நடத்தி வருவதும், அதில் தங்க நகைகளுடன் ரீல்ஸ் போட்டதும் வைரலானதால், அவரையும் விசாரிக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தச் சூழலில், மகள் மீனாட்சி செய்த இந்த மெகா கொள்ளைத் திட்டம் குறித்துத் தாயாருக்கு முன்பே ஏதேனும் தெரிந்திருந்ததா? கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பதுக்கி வைப்பதிலோ அல்லது தடயங்களை மறைப்பதிலோ குடும்பத்தினருக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் மீனாட்சியின் தாயாரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.
சொந்த வீடு கட்டும் ஆசையால் வந்த வினை
மீனாட்சி புதிதாகக் கட்டி வந்த வீட்டிற்குப் பணம் தேவைப்பட்டதாலும், கடனை அடைக்கவும் இந்தக் கொள்ளையை நிஷாந்த் திட்டமிட்டு அரங்கேற்றியது விசாரணையில் உறுதியாகியுள்ளது. காதலியின் ஆசையை நிறைவேற்ற சினிமா பாணியில் கொள்ளையடித்த நிஷாந்தும், அதற்குத் துணை போன காதலி மீனாட்சி மற்றும் தந்தை சுரேஷ் ஆகிய மூவரும் இப்போது கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நகைகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட நகைக்கடை நிர்வாகமும், நகைகளை முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
