தாயின் நகைகளை திருடி கேடிஎம் பைக் வாங்கினாரா நிஷாந்த்? தனிஷ்க் கொள்ளையனின் அதிர வைக்கும் பின்னணி!
மதுரை: மதுரை தனிஷ்க் நகை கடையில் கொள்ளையடித்த யூடியூபர் நிஷாந்த், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயின் நகைகளை திருடி கேடிஎம் பைக் வாங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்போதும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவராகவே இருந்துள்ளார் இந்த நிஷாந்த்!
மதுரை பழங்காநத்தம் எம்.கே.பி.நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் நிஷாந்த். யூடியூப் சேனலை வைத்து நடத்தி வருகிறார். இவர் மதுரை தனிஷ்க் நகைக் கடையில் 15 கிலோ நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள நிஷாந்தை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் அவரது காதலியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி நாச்சியார், நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரேஷிடம் விசாரணை
நிஷாந்த்தின் தந்தை சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. போலீஸிடம் தந்தை கூறியதாக வெளியான தகவலில், 2024 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விஸ்காம் படித்து வந்தவர் நிஷாந்த், இவருடன் மீனாட்சி நாச்சியாரும் படித்தாராம். அப்போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நிஷாந்துக்கு ஆடம்பரமாக வாழ ஆசையாம். ஆனால் ஆட்டோ ஓட்டுநரான தந்தையால் நிஷாந்தின் ஆசைக்கு தீனி போட முடியவில்லை.
15 லட்சம் மதிப்பிலான கேடிஎம் பைக்
இந்த நிலையில் 15 லட்சம் மதிப்பிலான கேடிஎம் பைக்கை வாங்க வேண்டும் என்ற ஆசை நிஷாந்திற்கு இருந்ததாம். ஆனால் வாங்க முடியாததால் , தனது தாயின் நகைகளை திருடி அதை விற்று, கேடிஎம் பைக் வாங்கினாராம். இந்த பைக்கில் காதலி மீனாட்சியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று ஊர் சுற்றியதும் தெரியவந்தது.
திட்டிய தந்தை
தாயின் நகை திருட்டு குறித்து தந்தை சுரேஷுக்கு தெரியவந்ததை அடுத்து அவர் நிஷாந்தை திட்டினாராம். இதனால் தனது விஸ்காம் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார் நிஷாந்த், பின்னர் வீடியோ எடிட்டிங் செய்யும் பணிகளில் திறமையாளரான நிஷாந்த் யூடியூபரானாராம்.
காதலியை திருமணம் செய்ய முடிவு
இந்த நிலையில் காதலியை திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தாராம். ஆனால் , காதலி கட்டி வரும் வீடு பணம் இல்லாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு மீனாட்சி கண்ணீர் விட்டதாலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் தனிஷ்க் நகைக் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
நிஷாந்த் எங்கே?
தலைமறைவாக உள்ள நிஷாந்தை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர் கிடைத்தால்தான் எத்தனை கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அவரிடம் ஏதேனும் நகைகள் உள்ளனவா உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் தெரியும்.
செல்போனில் தகவல்
மற்றபடி நிஷாந்த் தப்பி செல்லும் வகையில் வழிபோக்கனின் போனை வாங்கி காதலியிடம் பேசினாராம். அப்போது தான் நகைகளை மாடக்குளம் அருகே உள்ள குளத்து பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தாராம். மேலும் தான் திரும்பி வராவிட்டால் அந்த நகைகளை எடுத்து வீட்டை கட்டிக் கொள்ளுமாறும் நிஷாந்த் தெரிவித்தாராம். இதையடுத்து காதலி மீனாட்சியை அழைத்துக் கொண்டு போலீஸார் நகையை பதுக்கி வைத்திருந்த இடத்தை காட்ட சொன்னார்கள். அப்போது அங்கு எருக்கம்செடியின் புதரில் இருந்த பகுதியை தோண்டிய போது அதில் நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




Click it and Unblock the Notifications
