மதுரை தனிஷ்க் கொள்ளை.. மீனாட்சி நாச்சியார், சுரேஷ் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் இதுவரை 15 கிலோ வரை மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடய இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி நாச்சியார், நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் இருவருக்கும் நவம்பர் 29 வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை பைபாஸ் சாலையில் தனிஷ்க் நகைக்கடை புதிதாக கட்டப்பட்டது. தீபாவளி பண்டிகை விற்பனையை குறிவைத்து கட்டுமானப் பணி நிறைவடையும் முன்பே உரிய பாதுகாப்பு வசதிகளின்றி நகைக்கடை திறக்கப்பட்டது. கடந்த 12 ஆம் தேதி அதிகாலை நகைக்கடையின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமானது.

லாக்கர் வசதி இல்லாத நிலையில், நகைககள் அனைத்தும் ரேக்குகளிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை சாதகமாக பயன்படுத்தி, நகைகளை எளிதாக கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 5 உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய 5 தனிப்படையினர் இந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிரமாக தேடி வந்தனர்.
நகைக்கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளை சம்பவம் நடந்த அதிகாலை 3.34 மணியளவில் நகைக்கடை அருகில் இருந்து ஹெல்மெட், முகமூடி அணிந்து வந்த 21 வயது இளைஞர் ஸ்கூட்டரில் நேரு நகருக்குள் சென்ற வீடியோ காட்சிகள் கிடைத்தன. கொள்ளை சம்பவத்திற்கு முன்னதாக கடைக்கு நகை வாங்குவதுபோல் வந்து, நகைகளை அணிந்து இன்ஸ்டாவில் இளைஞர் ஒருவர் பதிவிட்டதும் தெரிந்தது.
விசாரணையில், 21 வயதுள்ள அந்த இளைஞரின் பெயர் நிஷாந்த் எனவும், நகைக்கடைக்கு அருகேயுள்ள விகேபி நகரில் வசிப்பதும், தெரிய வந்தது. நிஷாந்த் வீட்டில் போலீசார் சோதனையிட்டதோடு, அவரது தந்தையான ஆட்டோ டிரைவர் சுரேஷ் உள்ளிட்டோரிடமும் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
நிஷாந்த், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபோது அணிந்த ஆடைகளை தந்தை சுரேஷுடன் சேர்ந்து மதுரை அருகே உள்ள மாடக்குளத்தில் உள்ள வயல்காட்டுப் பகுதியில் எரித்துள்ளார். இதை தாங்கள் பார்த்ததாக அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் நிஷாந்தின் தோழியான திருப்பாலை அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி நாச்சியார் (26) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மீனாட்சியையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தொடர் விசாரணை நடந்தது. கொள்ளையடித்த நகைகளை 3 பகுதியாக பிரித்து தந்தை, மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு, கொஞ்சம் நகைகளுடன் நிஷாந்த் தலைமறைவானதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மாடக்குளம் மலையடிவாரத்தில் நகைகள் புதைத்து வைக்கப்பட்ட தகவலும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை அப்பகுதியில் போலீசார் மீனாட்சியை அழைத்துச் சென்று தேடினர். அப்போது புதருக்குள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த நகைகளுடன் கூடிய பையை போலீசார் மீட்டனர். இதனால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் மொத்தம் 15 கிலோ நகைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. நிஷாந்த்திடம் உள்ள நகைகள் மட்டுமே கைப்பற்ற வேண்டியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவான நிஷாந்த்தை பிடித்தால் மட்டுமே கொள்ளை சம்பவத்தில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும், கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகள் எங்கு உள்ளன என்பதும் தெரியவரும். அவரைப் பிடிக்க, தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி நாச்சியார் மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோரை போலீசார், ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் நவ.29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



Click it and Unblock the Notifications
