"2 கட்டப்பை துணிகளை எரித்தார்" மதுரை தனிஷ்க் கொள்ளையில் திடீர் ட்விஸ்ட்! நேரில் பார்த்த சாட்சி பகீர்
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் 15 கிலோ நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் பழங்காநத்தம் இளைஞர் குறித்து போலீஸுக்கு ஒரு துப்பு கிடைத்துள்ளது. இந்த இளைஞர் நேற்று மாலை முதலே தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பழங்காநத்தம் பட்டதாரி இளைஞர் நிஷாந்த் கிருஷ்ணா என்ற இளைஞர் வீட்டில் நேற்று மாலை முதல் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே போல, கோபாலி மலையை சுற்றியுள்ள கண்மாய்கள், வயல்வெளிகள், ரயில் தண்டவாளங்கள் தோப்புகளில் போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். அது போல் அவரது வீட்டில் நடந்த சோதனையில் லேப்டாப், போலி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
நெருங்கிவிட்ட போலீஸ்
போலீஸார் தன்னை நெருங்குவது தெரிந்ததாலோ என்னவோ அந்த இளைஞர் நேற்று மாலை முதல் தலைமறைவாகிவிட்டார். எனினும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழங்காநத்தம் இளைஞர் குறித்து தற்போது ஒரு திடுக் தகவல் கிடைத்தது. அவர் மாடக்குளம் வயல்வெளி பகுதியில் துணிகளை எரித்ததாக நேரில் பார்த்தவர் சாட்சி அளித்துள்ளார்.
நேரில் பார்த்த சாட்சியம்
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற இளைஞர் கூறுகையில், நேற்று காலை 9.30 மணிக்கு ஆட்டோவில் வந்த ஒரு இளைஞர், இரண்டு கட்டப்பைகள் நிறைய துணிகளை கொண்டு வந்தார். அப்போது அங்கு அவற்றை எரித்தார். கையில் வைத்திருந்த கருப்பு நிற ரெயின் கோட்டையும் எரித்தார்.
23 வயசு இருக்கும்
இதுவரை அந்த பகுதியில் அவரை பார்க்காததால் அவரிடம் "நீங்கள் யார்?, இதுவரை உங்களை இங்கு பார்த்ததில்லையே" என கேட்டேன். அதற்கு அவர், "எனக்கு இங்கே இடமிருக்கிறது" என தெரிவித்தார். அவர் 23 வயது மதிக்கத்தக்கவர், தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தார். நன்கு சிகப்பாக இருந்தார். ஆட்டோவில் துணி எரிக்க வந்தபோது அவர் முகமூடி போடவில்லை. அவர் வந்த ஆட்டோ மிகவும் பழையது, சீட் கிழிந்திருந்தது.
ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி
நகைக் கடையில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் தலையில் நிறைய முடி இருக்கிறது. ஆனால் இவர் தலைமுடி ஒட்ட வெட்டியிருந்தார். ஆனால் போலீஸார் நேற்று சோதனை நடத்தும் இளைஞர்தான், துணியை எரித்தவர். அந்த இடத்தில் ஒரு கால் மணி நேரம் அல்லது 20 நிமிடங்கள் இருந்தார்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பழங்காநத்தம் இளைஞரா?
இதனால் பழங்காநத்தம் இளைஞர்தான் துணியை எரித்திருப்பார் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். மேலும் ஒரு வேளை நேற்று காலை அந்த நபர் முடியை ஒட்ட வெட்டியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மதுரை பழங்காநத்தம்- காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜுவல்லர்ஸின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த கடை திறக்கப்பட்டு 15 நாட்களாகின்றன. இது 3 தளங்களை கொண்டது.
தரைதளத்தில் வாகன நிறுத்துமிடம்
தரைதளத்தில் வாகன நிறுத்துமிடமும், முதல் தளத்தில் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனையகம், 2-ஆம் தளத்தில் வைர நகைகள் விற்பனையகமும், 3 ஆம் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் பெட்டகங்களும் அமைக்கும் வகையில் கட்டடப் பணிகள் தொடங்கின. இந்த கடையில் கடந்த வியாழக்கிழமை 21 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னல்களும் கண்ணாடிகளும் உடைக்கப்படாத நிலையில் இந்த கொள்ளை எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து போலீஸார் சந்தேகித்திருக்கிறார்கள்.
கொள்ளையடித்தது எப்படி?
அதாவது கடை கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இதனால் கடையின் பின்புறம் இரும்பு சாரம் உள்ளது. அதன் வழியாக மொட்டை மாடிக்கு சென்ற கொள்ளையன், லிப்ட் அமைக்கும் பணிக்கு போடப்பட்டிருந்த கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பாதை வழியாகவே முதல் தளத்திற்கு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்து கொள்ளையடித்த நகைகளை இரு சக்கர ஸ்கூட்டி வாகனத்தில் முன்புறத்தில் வைத்து எடுத்து சென்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications
