முதல்வர் விஜய்யின் கார் கான்வாய்க்குள் பைக்குடன் நுழைய முயன்ற நபர்.. மதுரை ரோடு ஷோவில் திடீர் பரபரப்பு
சென்னை: தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இதற்காக விமான நிலையத்தில் இருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனை நோக்கி சாலை வலமாக வந்த முதல்வர் விஜய்க்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர். அப்போது ஸ்கூட்டியில் வந்த நபர் ஒருவர் விஜய் கான்வாயின் குறுக்கே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையத்து அந்த நபரை பிடித்து ஸ்கூட்டியை பறிமுதல் செய்த போலீசார் சிறிது நேரம் கழித்து அனுப்பி வைத்தனர்.
இதே பொன்று விஜய்யை பார்ப்பதற்காக வெயிலில் நீண்ட நேரம் காத்து நின்ற 10-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு உண்டானது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டம்
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். விஜய்யை பார்த்ததும் கண்ணீர்விட்டபடி கட்டியணைத்து தாய்மார்கள் அன்பை வெளிப்படுத்தினர். விஜய்யும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து தூக்கி முத்தமிட்டு கொஞ்சி விளையாடினார். முன்னதாக இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் இன்று சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோவாக புறப்பட்டார்.
பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங் ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக விஜய்யின் வாகனம் வந்தது. இதற்கான முன்னேற்பாடாக, இந்த வழித்தடத்தில் இரும்புத் தடுப்புகள் மற்றும் சவுக்குக் கம்புகள் மூலம் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. விஜய்க்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் விஜய்யும் கை அசைத்தபடியே வருகை தந்தார். அப்போது, விஜய்யின் கான்வாய்க்கு பின்னே ஸ்கூட்டியில் வந்த நபர் குறுக்கே வந்தார்.
உன்னை யார் உள்ளே வர சொன்னது
இதனால் பதற்றமடைந்த போலீசார் உடனே அந்த ஸ்கூட்டியில் வந்தவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓரமா வா.. உன்னை யார் உள்ளே வர சொன்னது.. என கூறியபடி ஸ்கூட்டியை பறிமுதல் செய்து சாலை ஓரம் நிறுத்தினர். அந்த நபரையும் யார் நீங்கள், எதற்காக உள்ளே வந்தீர்கள் என்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நபர் விடுவிக்கப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
இதே போன்று முதல்வர் விஜய்யை பார்க்க வேண்டும் என மின்கம்பம் மீது ஒருவர் ஏற முயன்றார். இதனை கவனித்த விஜய் அந்த நபரை அதட்டி கீழே இறங்குமாறு கூறினார். வழி நெடுக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களில் யாரும் ஏறி விட கூடாது என்பதற்காக முன்னேற்பாடாக அந்த கிளைகளும் வெட்டப்பட்டிருந்தன.
10 பேர் மயக்கம்
இருந்த போதிலும் இன்று முதல்வர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்த 10 பேர் மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதே போல, காந்தி அருங்காட்சியம் வெளியே விஜய்யை பார்ப்பதற்காக காத்திருந்தவர்களில் 3 பேர் மயங்கி கீழே விழுந்தனர். உடனே அவர்களை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications
