தவெக ஆட்சியை கவிழ்க்கவே முடியாது! ஸ்டாலினும் உதயநிதியும் என்ன வேணாலும் சொல்லட்டும்! மாணிக்கம் தாகூர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: எவ்வளவு பணம் கொட்டினாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஊழல் சக்திகள் ஒன்றிணைந்து சதி செய்கின்றன என விருதுநகர் எம்பியும், காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை திருநகர் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Manickam Tagore

தீபாவளி பண்டிகையைப் பொறுத்தவரை, பெரும் விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பான முறையில் கொண்டாடிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்கள் உழைப்பு

சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுத் தொழிலாளர்களின் உழைப்பால் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதாகவும், பசுமைப் பட்டாசுகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குற்றச் சம்பவங்கள்

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "முந்தைய அதிமுக ஆட்சியிலும், அதற்குப் பின்னர் நடைபெற்ற திமுக ஆட்சியிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதாகக்" குறிப்பிட்டார்.

குற்றங்கள் குறைந்துள்ளனவா?

"அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மாதந்தோறும் குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டால், குற்றங்கள் குறைந்துள்ளனவா அல்லது அதிகரித்துள்ளனவா என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும்" என்றார்.

மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய அவர், "கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தனது அரசியல் லாபத்திற்காகத் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகக்" குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது என்றும், கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களுக்குத் துரோகம் செய்துள்ளதாகவும் விமர்சித்தார். தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் அநீதிக்காக பாஜகவினர் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும், காவிரி உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார்.

மக்களால் நிராகரிப்பு

பாஜகவின் அரசியல் நிலை குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் பாஜக, உட்கட்சிப் பிளவுகள் மற்றும் ராஜினாமாக்களைச் சந்தித்து வருவதாகவும், தமிழகத்தில் அரசியல் முகவரி இல்லாத நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் ஜிஎஸ்டி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு பாரபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

கடலோர காவல் படை

கடலோரக் காவல்படை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் மீனவர்கள் கடலுக்குச் சென்று உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்தார். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு எவ்வளவு நிதி வழங்கினாலும் உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது என்றும், மீனவர்களின் உயிரைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும் கூறினார். இவ்விவகாரத்தில் மத்திய அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏன் உரிய கேள்விகளை எழுப்பத் தயங்குகிறார்.

இளம் கட்சி தவெக

தமிழக வெற்றிக் கழக ஆட்சி குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், விஜய் தலைமையில் தொடங்கப்பட்ட மிகவும் இளம் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், மக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழக நிர்வாகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளில் சுமார் 80 சதவீதமானவற்றைக் களைய வேண்டியுள்ளதாகவும், கமிஷன் பெறும் நடைமுறைக்குப் பலர் பழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறைகளை கேட்ட விஜய்

முதலமைச்சர் விஜய் நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்தி வருவதாகவும், மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருவதாகவும் கூறினார். தமிழகத்தின் அரசியல் களத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகத் தாங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

சீமான் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பல தேர்தல்களில் போட்டியிட்டும் இதுவரை வெற்றி பெற முடியாத நிலையில் சீமான் இருப்பதாகவும், தனது சொந்த ஊரான காரைக்குடியில்கூட வெற்றி பெற முடியவில்லை.

தவெக அரசைக் கவிழ்க்க கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சி

தமிழக வெற்றிக் கழக அரசைக் கவிழ்க்க பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சி செய்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்துக் கேட்கப்பட்டபோது, அத்தகைய முயற்சிகள் நடைபெற்று வருவது உண்மைதான்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இதுபோன்ற முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி தொடரக் கூடாது என்பதற்காக ஊழல் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், லஞ்சம் பெற்றவர்கள், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், டாஸ்மாக் ஊழலில் தொடர்புடையவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்கிறது.

இதற்காகப் பணப்பெட்டிகளுடன் சிலர் களமிறங்கியுள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழக வெற்றிக் கழக அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறி வந்தாலும், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என்றும், எவ்வளவு பணம் கொட்டினாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு குறித்துப் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழக அரசு பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்களைச் சரியான அளவில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒன்றிணைவோம் வா

திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' மென்பொருள் மூலம் வாக்காளர்களை இணைக்கும் நடவடிக்கை குறித்தும் விமர்சித்த அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட அனைவரும் திமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அர்த்தமில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+