“அண்ணே.. என்ன சொல்றீங்களோ.. அதை க்ளியர் பண்ணிடுவோம்” - செல்லூர் ராஜுவுக்கு உறுதி கொடுத்த அமைச்சர்!
மதுரை: மதுரையில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கிய நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்ச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் மூர்த்தியிடம் மழைநீரை வடிப்பதற்கான வழிமுறைகள் பற்றிக் கூறினார். அதனைக் கேட்டுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி, "அண்ணே.. நீங்க என்ன சொல்றீங்களோ.. நைட்டுக்குள்ள அதை க்ளியர் பண்ணிடுவோம்." என உறுதி கொடுத்தார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. மதுரையில் நேற்று மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மாநகரின் பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளில் உள்ள கால்வாய்களில் மழைநீர் நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆலங்குளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதில் முல்லை நகர், செல்லூர், கட்டபொம்மன் நகர், தத்தனேரி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது.
மதுரை மாநகரக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. கனமழை சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதேசமயம் மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதியில் உள்ள கட்டபொம்மன் நகர் போஸ் வீதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டார் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏவும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ.
அப்போது அப்பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் மூர்த்தியிடம், மக்களின் குறைகளை தெரிவித்து, அதிக மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் பற்றி கூறினார்.
அதனைக் கேட்டுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி, "அண்ணே.. நீங்க என்ன சொல்றீங்களோ.. நைட்டுக்குள்ள அதை க்ளியர் பண்ணிடுவோம்." என உறுதி கொடுத்தார். மேலும், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்திடம் பேசிய செல்லூர் ராஜு, "இந்த பகுதி மக்களுக்கு மழைநீர் தேங்காமல் செய்து கொடுத்து முத்திரை பதிங்கம்மா" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications