எடப்பாடியின் மாஸ்டர் மைண்ட்.. “முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை”.. திமுகவுக்கு செக் வைக்கும் தீர்மானம்
மதுரை: அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அதிமுக நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்றான முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை என்பது திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த செக்காக பார்க்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கோவை இஸ்லாமிய சிறை வாசிகளை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது முஸ்லிம்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக பல ஆண்டுகளாக இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால், இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. திமுக கூட்டணியில் உள்ள மமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே அந்த கோரிக்கையை வலியுறுத்தின. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் இது தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
ஆனால், இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படாததை கண்டித்து மமக, மஜக ஆகிய கட்சிகள் தலைமை செயலகம் நோக்கி பேரணியும் சென்றன. இந்த கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனை முன்வைத்து நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாடு அரசை விமர்சித்தும் வருகின்றன.
இந்த நிலையில்தான் நேற்று மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 32 தீர்மானங்களில் ஆளும் திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு வலுவாக இருக்கும் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் வாக்கு வங்கிதான். பெரும்பாலான தேர்தல்களில் சிறுபான்மையின மக்கள் திமுகவுக்கே வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதிமுகவில் உறுப்பினராக இருந்த, ஆதரவு நிலையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களும், பாஜகவுடனான கூட்டணியால் அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 வது பெரிய மக்கள் தொகையாக இருக்கும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே விழுந்தன. இதனால் அதிமுக அங்கு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உள்ளாட்சித் தேர்தலில், 2021 சட்டசபைத் தேர்தல்களிலும் திமுகவுக்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் விழுந்தன.
ஆனால், சிறை வாசிகள் திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகள் கடந்தும் விடுதலை செய்யப்படாதது இஸ்லாமிய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும், திமுகவுக்கு செக் வைக்கவும் இந்த தீர்மானத்தை அதிமுக பொன்விழா மாநாட்டில் அக்கட்சி நிறைவேற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications