தர்மேந்திர பிரதான் விலகினாலும் நீட் தொடரும்.. திமுகவுக்கு பேச தகுதியே இல்லை.. அமைச்சர் நிர்மல்குமார்
மதுரை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு அல்ல என்றும், தர்மேந்திர பிரதான் பதவி விலகினாலும் நீட் தேர்வு தொடருமே என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு இல்லை. இவர் பதவி விலகினாலும் நீட் தேர்வு தொடருமே. நம்முடைய கோரிக்கை நீட் தேர்வு வேண்டாம் என்பது தான். யார் பதவி விலகினாலும், விலகாவிட்டாலும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் நமது கோரிக்கை.

திமுக முன்னாள் அமைச்சர்கள் நீட் தேர்வு குறித்து எல்லாம் நிறைய பேசி இருக்கிறார்கள். இதை பேசக்கூடிய எந்த தகுதியும் திமுகவுக்கு கிடையாது. அவர்கள் தான் 5 வருடமாக இதனை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு போனார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். எப்படி நிறுத்துவார்கள். அது பார்லிமென்டில் பமசோதா நிறைவேற்ற வேண்டும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு, எப்படி நிறுத்துவீர்கள். தவறான நம்பிக்கையை மக்களிடத்தில் கொடுத்து இரண்டு வருடம் ஓட்டினார்கள். இப்பொழுது இறங்கி வந்து மேடையில் பேசுகிறார்கள். பேசக்கூடிய திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாருக்கும் தகுதி கிடையாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நமது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது, அதற்கான காலம் வரும் போது முதல் குரலாக நாம் குரல் கொடுப்போம்.
நீட் தேர்வு தேவையற்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தான் கொடுக்கும். எந்த வித பயனும் இல்லை என்பதை நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அரசு சார்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு, அறவழியில் நடக்கும் போராட்டங்களுக்கு முழு அளவில் பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்கு தேவையான அனுமதியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் கடந்த ஒரு மாதத்தில் சட்ட வல்லுநர்களுடன் எல்லா அளவிலும் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் இதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சியில் கடிதங்களை மட்டும் எழுதிவிட்டு பின்னாடி துரோகத்தை செய்யும் விஷயங்கள் இருக்காது. விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் நம் உரிமையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. முதல்வர் இதில் உறுதியாக உள்ளார் என்றார்.


Click it and Unblock the Notifications
