“சாதாரண வேலையா? எந்த வேலையும் சாதாரணம் அல்ல”.. தமிழக அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள்
மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்த வழக்கில், சாதாரண வேலைதான் வழங்கப்பட்டது என்ற தமிழக அரசின் வாதத்தை ஐகோர்ட் கிளை நிராகரித்துள்ளது. எந்த வேலையும் சாதாரண வேலை இல்லை என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தவெக தலைவர் விஜய்யைக் காண ரசிகர்கள் கூடியிருந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வரான விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கரூர் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினருக்கு தற்போது அரசு வேலை வழங்கக் கூடாது, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முடியும் வரை அரசுப் பணி எதுவும் வழங்க கூடாது என உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் கடந்த 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி போல கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது, இதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினர். கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றால் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டனர்.
இதையடுத்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக நியமனமாக அரசு வேலை வழங்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, முதல்வர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் இந்த மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தவெக அரசு வழங்கிய அரசுப் பணியை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. முதலமைச்சர் விஜய் கரூரில் கருணை அடிப்படையில் வழங்கிய பணி ஆணை உத்தரவுகளும் ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
"அரசுப் பணியிடங்கள் மாநில அரசால் எளிதில் வழங்கப்பட வேண்டியவை அல்ல. அவை தகுதியின் அடிப்படையில் பெறப்பட வேண்டியவை. அவற்றின் மதிப்பும் முக்கியத்துவமும் உணரப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பலர் உள்ளனர்" என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, காவல்துறையின் தவறால்தான் அவர்கள் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "திறன் வளர் பயிற்சி வழங்கி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு உதவலாமே? அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாகக் கூறுவதை ஏற்க இயலாது. எந்த பணியும் சாதாரண பணி அல்ல. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே" எனத் தெரிவித்தனர்.
மேலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது போல அரசுப் பேருந்து விபத்து விபத்துகள், பட்டாசு ஆலை விபத்துகளில் நாள்தோறும் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க முடியுமா என்றும் அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
