ஏப்பா டிரைவரு.. வண்டிய ஒத்தகடைல நிறுத்துயா! மதுரைக்கு வரும் வேற லெவல் அடையாளம்! மெட்ரோ பணி விறுவிறு!
மதுரை: சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில்வே வழித்தடம் அமையவுள்ள பகுதிகளில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த திட்டம் விரைவில் செயலாக்கம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் சேவை போதிய வரவேற்பு பெறாத நிலையில் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

தற்போது இரண்டு லைன்களில் அதாவது மெட்ரோ ரயில் சேவையானது நீலம், பச்சை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பிங்க் வழித்தட பணிகள் நடைபெற்று வருகின்றன.
2015ஆம் ஆண்டு ஜூன் முதல் கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ வழி தடமும், 2016 ஆம் ஆண்டு சின்னமலை முதல் விமான நிலைய வழித்தடமும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவையானது நீட்டிக்கப்பட்டு தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையை அடுத்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும் என 2021ல் தமிழக அரசு அறிவித்தது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 31 கிமீ தொலைவில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. தமிழக பட்ஜெட் அறிக்கையில் மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.8,500 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், விரிவான திட்ட அறிக்கையின் முடிவில் அந்த தொகை ரூ.11,360 கோடியாக உயர்ந்தது.
முதற்கட்டமாக திருமங்கலம் தொடங்கி ஒத்தக்கடை வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது. திருமங்கலம் முதல் வசந்த நகர் வரை உயர் நிலை பாலமும், வசந்த நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமிக்கடியிலும், தல்லாகுளம் ஒத்தக்கடை இடையே உயர்நிலைப் பாலம் கொண்ட வழித்தடமும் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி சுமார் 32 கிலோமீட்டர் தூரத்தில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையும் எஞ்சிய 27 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல்நிலை வழித்தடமாகவும் அமைக்கப்படுவது உள்ளது.
இந்தத் திட்டத்தில் 27 ரயில் நிலையங்களில் 3 ரயில் நிலையங்கள் சுரங்க பாதையில் அமைய உள்ளது. மதுரை ரயில் நிலையம் பெரியார் பேருந்து நிலையத்திற்கு ஒன்றாகவும்ம் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கோரிப்பாளையத்தில் இரண்டு என மொத்தம் மூன்று சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பணி தொடங்கியதும் மேல் மட்ட வழித்தடங்கள் 3 ஆண்டுகளிலும் சுரங்கப்பாதைகள் நான்கரை ஆண்டுகளிலும் அமைக்கப்படும் எனவும் திட்டமிடப்பட்டது.
திட்டத்திற்கான மண் பரிசோதனை முடிந்து வழித்தடம் மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பகுதி என 90 சதவீத ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. இந்த நிலையில் விரைவில் ஒப்பந்த புள்ளி வழியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்குப் பிறகு எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது .
இந்த நிலையில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் மதுரையில் மெட்ரோ வழித்தட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு இந்த வங்கி கடன் அளித்துள்ளதால் அதற்கான தொடர் ஆய்வு பணிகள் நிமித்தம் நேற்று சென்னை வந்திருந்த வங்கி அதிகாரிகள் குழு, மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்கள் குறித்து பார்வையிட திட்டமிட்டனர். அதன்படி இன்று மதுரையில் ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications