ஆர்பி உதயகுமாருக்கு செக்.. ஓபிஎஸ் நடத்தும் பிரம்மாண்ட இணைப்பு விழா.. திமுகவில் இணையும் 1 லட்சம் பேர்
மதுரை: மார்ச் 7ஆம் தேதி நடக்கும் இணைப்பு விழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் பாங்கை கொண்டுள்ள ஸ்டாலினின் தலைமையை ஏற்று பலரும் மனப்பூர்வமாக இணைய உள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். அவருடன் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைய முதலில் தயங்கிய ஓபிஎஸ் உடன் திமுக தலைமை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இதன்பின் திமுகவில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து திமுகவில் இணைந்த ஓபிஎஸ், அடுத்தக் கட்டமாக தனது ஆதரவாளர்களை திமுக பக்கம் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக மதுரையில் திருமங்கலத்தில் பிரம்மாண்ட விழா நடக்கவுள்ளது. மார்ச் 7ஆம் தேதி நடக்கவுள்ள இந்த விழாவுக்காக முகூர்த்த நடும் பணிகள் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, தேனி மாவட்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 5 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். அந்த ஆட்சி தொடர வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் ஆதரவாக உள்ளனர். இதனிடையே சட்டசபைத் தேர்தல் வரவிருக்கிறது. இதில் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற விருப்பத்தை தார்மீகமாக மக்கள் கூறி வருகின்றனர்.
மதுரையில் மார்ச் 7ஆம் தேதி இணைப்பு விழா நடக்கவுள்ளது. அனைவரும் ஒருங்கிணைத்து செல்லும் பாங்கை கொண்டுள்ள ஸ்டாலினின் தலைமையை ஏற்று மனப்பூர்வமாக பலரும் இணைய உள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் திமுகவில் இணைய உள்ளனர். இந்த விழா வெற்றிகரமாக நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டம் திருமங்கலத்தில் நடக்கவிருப்பது பல்வேறு கணக்குகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதிமுகவின் முக்குலத்தோர் சமூகத்தின் முகமாக ஆர்பி உதயகுமார் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். அவரது கோட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணையும் விழாவை நடத்தவிருப்பது திமுகவுக்கு மிகப்பெரிய பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications