துபாய் டூ மதுரை.. தொப்பை வயிறு சார்.. உள்ளே அள்ள அள்ள தங்கம்.. அயன் சூர்யாவுக்கே டஃப்
மதுரை: அயன் பட பாணியில் துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் 1¼ கிலோ தங்க உருண்டைகளை விழுங்கிய பயணியை லாவகமாக பிடித்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
பொதுவாக டெல்லி, ஹைதராபாத் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கொச்சி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் இந்தியா திரும்பும் சிலர் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது அடிக்கடி நடக்கிறது. தங்கத்தை இறக்குமதி செய்ய இந்தியாவில் வர உள்ளது என்பதுடன், வெளிநாடுகளில் இந்தியாவைவிட தங்கத்தின் விலை குறைவாக உள்ளது. இதன் காரணமாக தங்கத்தை பயணிகளில் சிலர் கடத்தி வருவது தொடர்கிறது.

அப்படி தங்கம் கடத்தி வருவோர் பிடிப்பட்டால் கைது செய்யப்படுவதுடன் தங்கமும் பறிமுதல் செய்யப்படும். இதன் காரணமாக தங்கம் கடத்துவோர் சுங்க அதிகாரிகள் சோதனையில் தப்பிப்பதற்காக பல்வேறு யுக்திகளை கடைபிடிக்கிறார்கள். அயன் படத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக பல்வேறு காட்சிகளை வைத்திருப்பார்கள். உண்மையில் அயன் பட பாணியில் தினமும் விமான நிலையங்களில் பல்வேறு சம்பவங்கள் இந்தியா முழுவதுமே நடக்கின்றன. மதுரையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளன.
துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று அண்மையில் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்தனர். இதில், பயணி ஒருவரின் நடவடிக்கையில் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமாக இருந்ததால் அதிகாரிகள் அந்த பயணி மீது சந்தேகம் அடைந்தனர்.
இதனால் அவரை தனியாக அழைத்து சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, வயிற்றுப் பகுதியில் சிறிய அளவிலான 3 உருண்டைகள் இருந்தது நவீன சோதனையில் தெரியவந்தது. அதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, அயன்' படத்தில் உள்ளதை போல், தங்கத்தை விழுங்கி, வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அந்த பயணியின் வயிற்றில் இருந்த 3 உருண்டைகளை இனிமா' கொடுத்து வெளியே எடுத்தனர். அந்த உருண்டைகளை சோதனை செய்ததில் அவை "பேஸ்ட்" வடிவிலான தங்கம் என்பது உறுதியானது. அந்த தங்கம் 1 கிலோ 355 கிராம் எடையில் இருந்தது என்று கூறிய சுங்க அதிகாரிகள், அதன் மதிப்பு ரூ.80 லட்சத்து 77 ஆயிரத்து 160 என தெரிவித்தனர். இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அயன் சினிமா பட பாணியில் ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள 1¼ கிலோ தங்க உருண்டைகளை விழுங்கிய பயணி மதுரை விமான நிலையத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிளுக்கு கிடைத்த ரகசிய தகவலால் அந்த பயணி அப்படியே சிக்கி கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications