ஏலக்காய் லாரி தீ விபத்து புகார்.. மதுரை காவல் நிலையத்தில் திடீர் திருப்பம் - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
மதுரை: செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பால பாலகிருஷ்ணன் என்பவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து மற்றும் காவலர் கலைச்செல்வி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது மதுரை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை உசிலம்பட்டி அருகே 4 நாட்கள் முன் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்ததாக லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலகிருஷ்ணன் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கருதிய செக்கானூரணி காவலர்கள், அவரை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

அப்போது காவல் ஆய்வாளர் அறையில் அவரை அமர வைத்துவிட்டு சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் திரும்பி வந்து பார்த்த போது, அவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
புகாரில் முரண்பாடு ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட பயத்தில் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் விசாரணைக்காக அழைத்து வந்தவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு காவலர்கள் அஜாக்கிரதையாக இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இதனிடையே பாலகிருஷ்ணனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து மற்றும் காவலர் கலைச்செல்வி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட போது, இவர்கள் இருவரும் தான் பணியில் இருந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென் மண்டல ஐஜி தரப்பில், செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார்தாரர் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும். காவல் நிலைய சிசிடிவியில் பதிவான காட்சிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
