தமிழ்நாட்டிற்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு.. பாஜக ஆட்சியில் 9 மடங்கு உயர்வு.. பிரதமர் மோடி!
மதுரை: பாஜக ஆட்சியில் ரயில்வே துறைக்கு தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1,300 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, 10 ஆண்டுகளில் ரயில்வே துறை பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4 வழித்தடம், காரைக்குடி உள்ளிட்ட 8 மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள், கும்பகோணம், வேலூர், ஏற்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேபோல் மரக்காணம் - புதுச்சேரி பிரிவு, பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன்பின் பிரதமர் மோடி பேசுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்திற்கு தலை வணங்குகிறேன். 2014ஆம் ஆண்டு முதல் 4 ஆயிரம் கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக நெடுஞ்சாலை வளர்ச்சிகளில் அதிக முதலீடுகளை செய்துள்ளோம். ரூ.1,800 கோடியில் பரமக்குடி - ராமநாதபுரம் 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
இதன் மூலமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி செல்வது எளிதாகும். ரூ.2,157 கோடியில் மரக்காணம் - புதுச்சேரி இடையில் 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். கடந்த 15 ஆண்டுகளில் ரயில்வே துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களுக்கான நிதி 9 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ்நாட்டில் 1,300 கிமீ தூரத்திற்கு ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9 வந்தே பாரத் ரயில், 9 அம்ரித் பாரத் ரயில்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பயனளித்து வருகின்றன. தமிழ்நாட்டில் 8 மறுசீரமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைத்துள்ளேன். தம்ழ்நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு மத்திய அரசின் நிதி 3 மடங்கு அதிகரித்துள்ளது.
2026 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டது. மரபுசார்ந்த ஆதிச்சநல்லூர் மேம்பாடுத்தப்பட உள்ளது. புலிகட் ஏரி, பொதிகை மலையில் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தமிழ்நாடு வளர்ந்தால், தேசமும் வேகமாக வளரும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications