பொங்கல் பரிசு 3000..தேர்தல் ஜுரத்தால் அறிவித்த ஸ்டாலின்! அடுத்தாண்டு எங்க பட்ஜெட்.. உதயகுமார் உறுதி!
மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்ததால் பொங்கல் பரிசு மற்றும் மடிக்கணினி திட்டத்தை அறிவித்திருக்கிறார் எனவும், எங்களைப் போன்று திமுகவை கடுமையாக விமர்சிக்க யாரும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற ஆருத்ரா யாக நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையில் ஜனவரி 20ஆம் தேதி 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை முதல் கூட்டத்துடன் தொடங்க இருக்கிறது.
திமுக அரசால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். முழுமையான பட்ஜெட்டை கொடுக்க முடியாது. 2026 - 27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஜனநாயக அரசாக மக்களாட்சியின் அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சமர்ப்பிக்கப்படும் என்பது தான் இந்த புத்தாண்டின் மகிழ்ச்சியான செய்தி.

ஆர்பி உதயகுமார் விமர்சனம்
அதிமுகவை தவிர இந்த செயல்படாத திமுக அரசை யாரும் கண்டிப்பதில்லை. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி, உயர்வு பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், குப்பை வரி, பால் விலை உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு இதுவரை காணப்படாத அளவு கேள்விக்குறியாகி உள்ளது. போதை பொருள் வீட்டிற்குள் நுழையும் அளவிற்கு அதிகரித்துள்ளது. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் சவால் விடுகிறார். எதிர்க்கட்சித் தலைவரை விமர்சிக்காமல் அவருக்கு தூக்கம் வருவதில்லை. அதிமுக தேர்தல் களத்தில் முந்திக் கொண்டிருக்கிறது. மக்களின் வரவேற்பின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தால், அச்சத்தில் சவால் விடுகிறார்.
பொங்கல் பரிசு
போலீசை வைத்து, அதிகாரத்தை வைத்து தேர்தலை நடத்தி வென்று விடலாம் என முதல்வர் ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் தீர்ப்பே மகிழ்ச்சியின் தீர்ப்பு. சவால் விடுகிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி தக்க பதிலடி கொடுத்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவிலை தூய்மையான கோவில் என விருதை எடப்பாடி பழனிசாமி பெற்றார். ஆனால் தற்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆற்று நீரை மிதிக்காமல் கழிவு நீரை மிதித்து தான் சொல்கின்றனர். தூய்மை நகர் குப்பை மாநகரமாக மாறி உள்ளது. தமிழ்நாடே குப்பை நகராக மாறி வருகிறது. தலை குனிந்து இருப்பதை நாம் அறிவோம்.
ஸ்டாலின் திட்டம்
இந்த நிலையை அறிந்துள்ள முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஜுரம் வந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிப்பார். சென்ற ஆண்டு பொங்கல் பரிசு கிடையாது. தேர்தல் ஜுரம் வந்ததால் மடிக்கணினி கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். உழவர் உதவி மையம் அறிவித்திருக்கிறார். இவை அனைத்தும் தேர்தல் ஜுரத்தால் அறிவிக்கக் கூடிய திட்டம். மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டமல்ல. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2 கோடி தொண்டர்கள் வாசத்தை விசுவாசம் ஆக அவர் காட்டும் திசையில் மக்கள் பணியை மேற்கொள்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் வரலாற்று வாய்ப்பை எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் வழங்குவார்கள் என்பது தான் 2026 ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சியான நற்செய்தியாக அமையும். எந்த மாவட்டத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச் கொடுத்தாரோ அந்த மாவட்டத்தை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஆறு மாவட்டத்தை உருவாக்கியவர் பழனிசாமி. 4.5 ஆண்டு காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். எத்தனை மருத்துவக் கல்லூரிகளை திமுக உருவாக்கினார்கள்?" என்றார்.


Click it and Unblock the Notifications
