கார்த்திகை தீபம் அல்லாத நாளில் விளக்கு ஏற்றக் கூடாது! நீதிபதி சுவாமிநாதனுக்கு அர்ச்சகர்கள் எதிர்ப்பு
மதுரை: கார்த்திகை தீபம் அல்லாத நாளில் தீபம் ஏற்றக் கூடாது என இந்து அமைப்பினரும் அர்ச்சகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில் அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் அல்லது செயல் அலுவலருக்கு, இந்து வேத பாடசாலை தலைவர் செல்வம் பட்டர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது விசேஷமான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய திருக்கார்த்திகையன்று அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள்,பிரகாரங்கள், திருக்கோவில் அண்மையில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகிறது. மேலும் கார்த்திகை மாதம் வரும் கார்த்தி நட்சத்திரத்திலோ அல்லது பவுர்மணியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இதர நாட்களில் செய்யப்படுவது விசேஷமாக சொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அது போல் திருப்பரங்குன்றம் திருக்கோயில் பட்டர்கள், கோயிலின் நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், "அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் துணை ஆணையர்/ நிர்வாக அதிகாரி அவர்களுக்கு திருக்கோயில் ஸ்தானீர பட்டர்கள் எழுதிக் கொண்டது.

இந்த ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் இத்திருக்கோவில் வழக்கப்படி திருக்கோவிலுக்குள் பால தீபம் ஏற்றிய உடன் அதே நேரத்தில் வழக்கமாக ஏற்றக் கூடிய உச்சி பிள்ளையார் கோயிலில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு பின்பு சுவாமி புறப்பாடாகி பதினாறு கால் மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சொக்கப்பான் ஏற்றி சுவாமிக்கு ரக்ஷை சாற்றப்பட்டது என்ற விவரத்தை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மர்ற நாட்களில் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதையும் தெரிவத்துக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டு பட்டர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் விளக்கேற்ற வேண்டும் என மனுதாரர் ராமரவிக்குமாரின் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் தீபத்திருநாளில், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயிலிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமரவிக்குமார், இந்து அமைப்பினர், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வன்முறையிலும் அவர்கள் ஈடுபட்டதாக சொல்லப்படுவதால் இரு காவலர்களின் மண்டை உடைந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராம ரவிக்குமார், மதுரை கிளையில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன்," 144 உத்தரவை நீக்குகிறேன், நீங்கள் இப்போது உடனே (நேற்று) போய் விளக்கு ஏற்றிவிட்டு நாளை (இன்று) அறிக்கையுடன் வாருங்கள்" என தெரிவித்திருந்தார். இதையடுத்து திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்ற மனுதாரர், விளக்கேற்ற சென்ற போது அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கு பாஜக,இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications