“மதுக்கடைகளை பாதுகாப்பதில் காட்டும் அக்கறையை மலைகளை காப்பதில் காட்டவில்லை”- ஐகோர்ட் கிளை அதிருப்தி!
மதுரை: "மதுக்கடைகளை பாதுகாப்பதில் காட்டும் அக்கறையை, இயற்கை வளங்கள் தொடர்பான வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை. மதுக்கடைகளை விட மலைகளை பாதுகாப்பது முக்கியம்." என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரை பேரையூர் அருகே தொன்மையான ஓணான் கரடு மலையில் கல் குவாரி செயல்படுவதற்கு தடை கோரி நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கால அவகாசம் கோரியதை கண்டித்த நீதிபதிகள், "டாஸ்மாக் மதுக்கடைகளை பாதுகாப்பதில் அரசு காட்டும் தீவிர அக்கறையை, இயற்கை வளங்கள் தொடர்பான வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை" என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், "மதுக்கடைகளை விட மலைகளை பாதுகாப்பது முக்கியம். இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால் மீண்டும் கிடைக்குமா? இதுபோன்ற இயற்கை அமைப்புகள் மீண்டும் கிடைக்கக் கூடியவை அல்ல. இவற்றைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால் என்ன செய்வது?" என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
