ஓபிஎஸ் என்றால்தான் பிரச்சனை! மற்றபடி.. “சசிகலா” என்றவுடன்.. தனி ரூட்டில் போகிறாரா ஆர்.பி.உதயகுமார்?
மதுரை: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே அதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வரும் சூழலில் கட்சியினர் ஒருபிரிவாக பிரிந்து கருத்து தெரிவித்துவரும் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டும் புதிய வழியில் செல்கிறாரோ என்ற கேள்வி அவரது பேட்டியின் மூலமாக எழத் தொடங்கியுள்ளது.
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
அத்துடன் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட புதிய நியமனங்களும் செல்லுபடியாகி இருக்கிறது. அதில் ஒன்றுதான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி. ஓ.பன்னீர்செல்வம் வகித்த இந்த பதவியை மதுரையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.

ஏன் இந்த பதவி?
ஒ.பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே தென் மாவட்ட மக்கள் மற்றும் அவருடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களின் ஆதரவு குறைந்துவிடக்கூடாது என்பதால் ஆர்.பி.உதயகுமாருக்கு இந்த பதவியை வழங்கியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மன்னார்குடிக்கு ஆதரவா?
அதற்கு ஏற்றார்போலவே ஆர்.பி.உதயகுமாரும் கடந்த ஜூன் மாதம் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்ததில் இருந்தே ஜெயக்குமாருக்கு இணையாக ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் அவருடைய பேச்சில் சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு மீது அதிக அளவில் விமர்சனங்கள் இல்லை. ஆர்.பி.உதயகுமார் மன்னார்குடி குடும்பத்துக்கு ஆதரவாக உள்ளாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

டிடிவி தினகரன் மீது பழி
கடந்த வாரம் செய்தியாளார் சந்திப்பு ஒன்றில், பேசிய ஆர்.பி.உதயகுமார், "சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போது எல்லாம் பரிந்துரை செய்த டிடிவி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த, அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழி மற்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது.

சசிகலா
கட்சி ஒற்றுமையாக சசிகலாவை மீண்டும் சந்திப்பேன் என்று ஓ.பி.எஸ் நிகழ்த்தி வரும் நாடகத்தை கண்டு சிரிப்பதா அழுதா தெரியவில்லை. சசிகலாவை சிறையில் தள்ளி, அரசியல் அனாதை ஆகியது பன்னீர்செல்வம் தான். சுயநல அரசியலின் மொத்த உருவம், தனக்கு பதவி இல்லை என்று சொன்னால் இந்த கட்சியை அழிக்க தயாராகி விடுவார்." என்று கடுமையாக விமர்சித்தார்.

நழுவிய ஆர்.பி.
இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், அதிமுகவினர் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றாக கட்சியின் வெற்றிக்காக பாடுபட தயாராகி இருக்கின்றனர். அதிமுக ஒற்றுமையாக உள்ளது என்று நீதிமன்றமே தெரிவித்துவிட்டது." என்றார். அப்போது அவரிடம் சசிகலா "ஒற்றுமை" என்று ட்வீட் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது 'நன்றி வணக்கம், நன்றி வணக்கம், நன்றி வணக்கம்," என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவினார்.












Click it and Unblock the Notifications