தவெக கவுன்சிலர் சீட்! சிறையில் உள்ள குற்றவாளியின் உறவினர்களுக்கு முன்னுரிமை? மதுரையில் நடப்பது என்ன?
மதுரை: மதுரையில் தவெக சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான ரேஸில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் உறவினர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக ரவுடி வெள்ளைக்காளியின் உறவினர்களுக்கு தவெகவில் கவுன்சிலர் சீட் கொடுக்கப்பட வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் மிரட்டப்படுவதும் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த நாள் முதலே அக்கட்சி நிர்வாகிகள் பலரும் உள்ளாட்சித் தேர்தலை அதிகம் எதிர்பார்த்திருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக, அதிமுகவை கடந்து விஜய்க்காக தமக்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தவெகவுக்காக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேபோல் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளகளை வைத்து தங்களின் வார்டுகளில் நிகழ்ச்சி நடத்தி வந்தனர். மதுரையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அமைச்சர் நிர்மல்குமார் ஏராளமான வார்டுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சிகளை கவுன்சிலர் சீட்டை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இருந்தவர்களே பொறுப்பேற்று நடத்தினர்.
ஆனால் சமீப காலமாக கவுன்சிலர் சீட் பெறும் முனைப்பில் இருந்தவர்கள் பலரும் கப்சிப் மோடுக்கு சென்றுவிட்டனர். குறிப்பாக மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இப்படியான நிலை இருக்கிறது. இதன் பின்னணியில் சிறையில் உள்ள ரவுடிகளின் சேட்டை தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. வெள்ளைக்காளியின் உறவினர்கள் பலரும் தவெக சார்பாக கவுன்சிலர் சீட் கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
இன்னொரு பக்கம் விகே குருசாமியின் உறவினர்கள் தவெகவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்ற கவுன்சிலர் சீட் கோரி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கவுன்சிலர் சீட்டு கைப்பற்ற வேறு யாராவது முனைந்தால் கூட அவர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்படுகிறது. ஏற்கனவே திமுக கவுன்சிலர்களுக்கும் போட்டியிடக் கூடாது என்று மிரட்டல் சென்றிருக்கிறது.
காமராஜபுரம், வாழைத்தோப்பு, சிந்தாமணி, திருப்பரங்குன்றம், அனுப்பானடி, ஹவுசிங் போர்டு, பாலரெங்கபுரம், முனிச்சாலை, தெப்பக்குளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தவெகவினர் கவுன்சிலர் சீட் பெறுவதற்கே அச்சத்தில் இருக்கின்றனர். இதனால் தவெக தலைமை இதனை அறிந்து நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications
