வளமான தமிழகத்தை உருவாக்க உறுதி.. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய்
மதுரை: உலகின் 100 நாடுகளில் இலவச மருத்துவம் மற்றும் கல்விச் சேவைகளை வழங்கி வரும் 'ஒன் வேர்ல்ட் ஒன் ஃபேமிலி மிஷன்', தற்போது தமிழகத்திலும் தனது சேவைகளை விரிவுபடுத்த உள்ளது. மயிலாடுதுறையில் 60 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை, தென்காசியில் இலவச குருகுலம் தொடங்கபடுவதுடன், திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சத்ய சாய் மீனாட்சிநிகேதன் குருகுலத்தை பல்கலைக்கழக அளவுக்கு உயர்த்தும் நோக்கமும் உள்ளது என்று 'ஒன் வேர்ல்ட் ஒன் ஃபேமிலி மிஷன்' நிறுவனர் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் தெரிவித்தார்.
திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் மதிப்புசார் கல்வியை வழங்கும் இலவச குருகுலங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சத்ய சாய் மீனாட்சிநிகேதன் குருகுலத்தில், 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை 54 மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. கல்வியுடன் புத்தகங்கள், உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கொடைக்கானலில் மதிப்புசார் கல்வியை வழங்கி வரும் ஸ்ரீ சத்ய சாய் ஆனந்தநிகேதனில், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 46 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் கொடைக்கானல் நகரில் செயல்பட்டு வரும் சாய் ஸ்வஸ்த்ய கேந்திரா மூலம் பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. இந்த மையத்தின் மூலம் மாதந்தோறும் சுமார் 600 பேர் பயனடைந்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 13,000 பேர் இச்சேவையைப் பெற்றுள்ளனர்.
இதயத்திலிருந்து இதயத்திற்கு உரையாடல்
இந்த நிலையில் மதுரையில் 'இதயத்திலிருந்து இதயத்திற்கு உரையாடல்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல தொழிலதிபர் ஹரி தியாகராஜன் எழுப்பிய கேள்விகளுக்கு சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் பதிலளித்தார். அதில், கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் முட்டேனஹள்ளியில் உள்ள சத்ய சாய் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'ஒன் வேர்ல்ட் ஒன் ஃபேமிலி மிஷன்' சார்பில், தரும ஆதீனத்தின் ஒத்துழைப்புடன் மயிலாடுதுறையில் 60 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
ஆன்மிக மையங்களின் நோக்கம் கல்வி மற்றும் சுகாதார சேவையாக இருப்பது சிறப்பான செயலாகும் என்று குறிப்பிட்ட அவர், "வளமான தமிழகத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை" என்று தெரிவித்தார். தொடர்ந்து, "கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை. குழந்தைகளுக்கு சேவை செய்வதே சமூக சேவை. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவது சமூகத்தின் கடமை" என்றும் கூறினார்.
இலங்கையிலும் மருத்துவ சேவைகள்
இலங்கையில் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்து விளக்கமளித்த சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் போரின் தாக்கத்தால் சுமார் 30,000 பேர் கைம்பெண்களாக உள்ளனர். வறுமை அவர்களை வாட்டி வதைக்கிறது. குழந்தைகளுக்கு முறையான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு சேவை செய்வதில் என்ன தவறு இருக்கிறது. ஃபிஜி, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் தங்களது மிஷன் சார்பில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, செல்வந்தர்கள் அதிகமாக பணம் சம்பாதித்தாலும், அந்தப் பணம் முழுவதும் அவர்களுக்குச் சொந்தமானது அல்ல. தொழிலதிபர்கள் மனித உடலின் வயிற்றைப் போன்றவர்கள். நாம் உட்கொள்ளும் உணவை வயிறு செரித்து தன்னிடமே வைத்துக் கொள்வதில்லை. அதுபோல தொழிலதிபர்களும் சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்தியாவின் தாராள மனப்பான்மை கொண்ட கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டு பாணியிலான பணம் சம்பாதிக்கும் கலாசாரத்தைப் பின்பற்றக் கூடாது என்று கூறினார்.
ஆன்மிகக் கல்வி
பின், இந்திய கல்வித் துறையில் உபநிஷங்கள் போன்ற பாரம்பரிய ஆன்மிகக் கல்வியை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆன்மிகமே தீர்வாகும். ஆன்மிகம் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆன்மிக உணர்வு குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்தால், அவர்கள் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள். அதேபோல் ஆன்மிகக் கல்வி என்பது மதம் குறித்து அறியாமையை வளர்ப்பதாக இருக்கக் கூடாது.
மாறாக மதத்தின் உண்மையைப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். மதத்தை முற்றிலும் புறக்கணித்து வாழக் கூடாது. அதேபோல் மதத்தை வெறும் ஆடம்பரமாகவும் அணுகக் கூடாது. மதத்தை ஆழமாகவும் பற்றற்ற நிலையிலும் படிக்க வேண்டும். உலகில் எதிர்மறையான சூழல்கள் இருப்பது இயல்பானது. அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், இறைவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
குருகுல மாணவியின் மாற்றம்
தொடர்ந்து தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பகிர்ந்து கொண்ட திண்டுக்கல் ஸ்ரீ சத்ய சாய் மீனாட்சிநிகேதன் குருகுல மாணவி சங்கவி பேசுகையில், கடுமையான வறுமையில் இருந்த எனது பெற்றோர் என்னை இங்கு சேர்த்த பிறகு, நான் ஒரு புதிய உலகிற்குள் நுழைந்தேன். ஒரு கிராமத்தின் எல்லைக்குள் மட்டுமே இருந்த நான், இன்று ஒரு உலக குடும்பத்தின் உறுப்பினராக இருக்கிறேன். சமூக சேவையே மனித வாழ்க்கையின் நோக்கம் என்பதை இங்கு கற்றுக்கொண்டேன் என்றார்.
தருமை ஆதீனம் சிவகுருநாத தம்பிரான், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திக் கே உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஸ்ரீ சத்ய சாய் மனித மேம்பாட்டு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் எஸ். கோகுல பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


Click it and Unblock the Notifications
