சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்.. அப்ரூவராக மாறிய முன்னாள் காவல் ஆய்வாளர்
மதுரை: 2020 கொரோனா தாக்கம் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு மத்தியில், சாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சாதாரண வியாபாரிகளுக்கு நடந்த துயர சம்பவத்துக்கு இப்போது வரை நீதி கிடைக்கவில்லை.
5 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக உள்ள சாத்தான்குளம் காவல்நிலையம் ஆய்வராக இருந்த ஶ்ரீதர் திடீர் திருப்பமாக, தான் அப்ரூவராக மாறி அனைத்து உண்மைகளையும் சொல்கிறேன் என்று மதுரை நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். தந்தை மகனாக இவர்களை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி காவல்துறையினர் சட்ட விரோதமாக கைது செய்து, கஸ்டடியில் வைத்து தந்தை மகன் இருவரையும் கொடூரமாக தாக்கினர். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிபிஐ விசாரணை
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையம் ஆய்வாளர் ஶ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடக்கத்தில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடைபெற்று கடந்த 5 வருடங்களாகியும் விசாரணை முடியவில்லை.
குற்ற பத்திரிக்கை
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆய்வாதளர் ஶ்ரீதுர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல் கட்டமாக சுமார் 2,000 பக்கங்களும், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
நீதிமன்றம் உத்தரவு
105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளை, 6 மாதங்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமே மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டு சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போதுவரை விசாரணை நிறைவடையாதது ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் திருப்பம்
இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் கொலை வழக்கில், ஆய்வாளர் ஶ்ரீதர் தான் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் திடீரென மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனு இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உண்மையை சொல்கிறேன்
அந்த மனுவில் ஶ்ரீதர், "அரசுத் தரப்பு சாட்சியாகி அனைத்து தகவல்களையும் சொல்ல விரும்புகிறேன். அப்ரூவராக மாறி அனைத்து காவலர்கள் செய்த செயல்களை கூற விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பாட்டு அனைத்து உண்மைகளையும் சொல்கிறேன். நேர்மையுடன் நீதிமன்றத்தில் உண்மையை சொல்ல விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக சிபிஐ பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களாக சாத்தான்குளம் வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லாத நிலையில், ஶ்ரீதர் அப்ரூவராக மாற முன் வந்திருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications