குண்டாஸா? முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பற்றி சர்ச்சை! சீமான் மீது பாயும் நடவடிக்கை? மதுரையில் பரபர புகார்
மதுரை: முஸ்லிம், கிறிஸ்தவர்கள் சைத்தானின் பிள்ளைகளாக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரில் நடந்த வன்முறையில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அரங்கேறி உள்ளன. குறிப்பாக 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக ஒரு கும்பல் அழைத்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில பாஜக அரசுகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பல இடங்களில் கன்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மணிப்பூரில் குகி பழங்குடியின மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சீமான் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை சாத்தானின் பிள்ளைகள் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக சீமான் பேசும்போது, ‛‛இலங்கையில் தமிழின மக்களுக்கு நேர்ந்த கொடுமை நடந்தது. அதன் வலி நமக்கு தெரியும். இதனால் மணிப்பூருக்காக பேசுகிறோம். இதை பேசுவதால் எந்த லாபமும் இல்லை. மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை.
இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது'' என தெரிவித்து இருந்தது.
சீமானின் இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய தலைவர்கள், கிறிஸ்தவ அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் சீமானின் பேச்சை விமர்சனம் செய்துள்ளனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாள் சீமான் மீது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முகமது இதிரீஸ், செயலர் சித்திக் உள்ளிட்டோர் இந்த புகாரை அளித்துள்ளனர்.
அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்துவர்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசி வருகிறார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது செயல் என்பது சமூக ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக இருக்கிறது. இதனால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications