சாலமன் பாப்பையா உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு! கைப்பட எழுதிய உயிலில் என்ன இருக்கிறது?
மதுரை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது. அவர் உயில் எழுதி வைத்தது போல் அவரது இறுதி சடங்குகள் செய்யப்படுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய பட்டிமன்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்னும் சற்று நேரத்தில் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

மதுரை ஞானஒளிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகை தர உள்ளனர்.
இந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கு குறித்த தகவலை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை மதியம் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனது உடலை இறந்த பிறகு எரிக்க வேண்டும் என சாலமன் பாப்பையா உயில் எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது. சாலமன் பாப்பையா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். அந்த சமூகத்தில் இறந்தவர்களை சிலுவை பதித்துள்ள பெட்டியில் வைத்து புதைப்பது வழக்கம். ஆனால் சாலமன் பாப்பையா சொன்னபடியே அவரது உடலை தகனம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டிமன்ற மேடைகளின் மூலம் தமிழை உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞரின் மறைவு, தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: தமிழின் இனிமையையும்,
பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த
தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அது போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா அவர்கள், தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையா அவர்களை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.
சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
