சுடச்சுட சாப்பாடு.. LED திரைகள்! சிறப்பு ஏற்பாடு, திரளான பக்தர்களுடன் நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்!
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம், திரளான பக்தர்கள் சூழ விமரிசையாக நடைபெற்றுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், நேற்று திக் விஜயம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை நடைபெற்றுள்ளது.

சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக மதுரை மாநகரமே விழாக்கோலத்துடன் களைகட்டியது. திருக்கல்யாணத்தை காண்பதற்காக அதிகாலை முதலே மதுரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான புதுமணத் தம்பதிகளும் வருகை தந்தனர்.

கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. மதுரை சித்திரை திருவிழாவில் உற்சாகம்!
சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் பட்டு சாத்தப்பட்டு எழுந்தருளினர். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக மீனாட்சி அம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும், பெண்கள் மங்கல நாண் மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாணத்தை அடுத்து கோவிலை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு தாலிக்கயிறும், குங்குமம் வழங்கப்பட்டது.

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக மேற்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திற்கும், வடக்கு ஆடி வீதியில் சுமார் 700 அடி நீளத்திற்கும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. திருக்கல்யாணத்தை நேரடியாக தரிசிக்க, கட்டண தரிசனத்தில் 6 ஆயிரம் பேர், இலவச தரிசனத்தில் 6 ஆயிரம் பேர் என மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எனினும், திருக்கல்யாணக் காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக சித்திரை வீதிகள் உட்பட 20 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக கேசரி, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வெஜ் பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications