உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று மதுரை வருகை! பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்
மதுரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் இன்று மதுரை வருகை தருகிறார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நவீன வசதிகளுடன் ரூ.166 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் இதனை தலைமை நீதிபதி சூரியகாந்த் திறந்து வைக்கிறார். இதேபோன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விருந்தினர் மாளிகை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார். இதையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மேலூர் சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.166 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் பின்னர் கீழ்தளம், தரை தளம் மற்றும் 3 கூடுதல் தளங்களுடன் அனைத்து நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் கட்டும் பணி நடந்து வந்தது.

சுமார் 3 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்த கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விருந்தினர் மாளிகை திறப்பு விழா இன்று நடக்கிறது. இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் இன்று மதுரை வருகிறார். காலை 11 மணியளவில் இந்த கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் சிறப்புரை ஆற்றுகிறார்.
இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் வீடியோ வெளியிடப்பட உள்ளது. இந்த கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஜேகே மகேஸ்வரி, எம் எம் சுந்தரேஷ், மகாதேவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்ஏ தர்மாதிகாரி தலைமை உரை ஆற்ற உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மதுரைக்கு வருகை தருவதையொட்டி, மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் திறப்பு விழா மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விருந்தினர் மாளிகை திறப்பு விழாவையொட்டி, விழா முடியும் வரை, மாட்டுத்தாவணி மற்றும் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாட்டுத்தாவணியில் இருந்து நீதிமன்றம் நோக்கி செல்லும் வாகனங்கள் பழ மார்க்கெட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மேலமடை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு வழியாக குருவிக்காரன் சாலை மற்றும் வைகை வடகரை சாலை வழியாக செல்லலாம்.
அவுட்போஸ்ட் பகுதியில் இருந்து நீதிமன்றம் நோக்கி செல்லும் வாகனங்கள் தமுக்கம், அரசு மருத்துவமனை சாலை வழியாக செல்ல வேண்டும். மேற்கண்ட மாற்றங்களை புரிந்துகொண்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மாற்றுப்பாதையைப் பயன்படுத்தி, முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications