"120 நாட்கள் டைம்.." மதுரை மெட்ரோ பணிகளை தொடங்கிய தமிழக அரசு! ஒத்தக்கடை - திருமங்கலம் வரும் மெட்ரோ
மதுரை மெட்ரோ குறித்து மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை: மதுரை மெட்ரோ குறித்து அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியாகி, மதுரை மக்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாக மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே பொது போக்குவரத்து சிறப்பாக உள்ள மாநிலங்களில் முதன்மையானது தமிழ்நாடு.. நமது மாநிலத்தில் அனைத்து முக்கிய ஊர்களுக்கும் பேருந்து போக்குவரத்து நிச்சயம் இருக்கும்.
அதேபோல நகரங்களிலும் கூட அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

மெட்ரோ
இது ஒரு பக்கம் இருக்க.. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இப்போது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை ஒரு வழித்தடம் சென்டரல் முதல் பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடம் என்று இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

வழித்தடங்கள்
இதிற்கிடைய மெட்ரோ ரயிலை விரிவுபடுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.. மாதவரம்-சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் என்று மொத்தம் 3 வழித்தடங்களில் இப்போது மெட்ரோ கட்டுமானம் நடந்து வருகிறது. வரும் 2026 முதல் படிப்படியாக இந்த மெட்ரோ செயல்பாட்டிற்கு வரும்.. அனைத்து வழித்தடங்களிலும் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால்.. 5 வழித்தடங்களில் மிக சிறப்பான ஒரு மெட்ரோ உள்கட்டமைப்பைக் கொண்ட நகரமாகச் சென்னை உருவெடுக்கும்.

மதுரை மெட்ரோ டெண்டர்
இதற்கிடையே சென்னைக்கு வெளியே மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த அரசு ஆலோசித்து வருகிறது. கோவை, மதுரை போன்ற நகரங்களில் மெட்ரோ சேவை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2021 தமிழக அரசு பட்ஜெட்டில் மதுரையில் மெட்ரோ குறித்த அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் வெளியிட்டார். மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த பணிகளை முன்னின்று செயல்படுத்துகிறது.

120 நாட்கள்
இந்தச் சூழலில் இதற்கான பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 3 கோடி ரூபாய் மதிப்பில் இந்த டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், 120 நாட்களில் மொத்த பணிகளையும் முடித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எந்த வழித்தடம்
மதுரையில் முதல்கட்டமாகத் திருமங்கலம் டூ ஒத்தக்கடை வரை 31 கிமீக்கு மெட்ரோ சேவை கொண்டு வரப்படும்.. மொத்தம் 17 நிறுத்தங்களைக் கொண்டாக இந்த வழித்தடத்தைத் திட்டமிட்டுள்ளனர். கோரிப்பாளையம், வசந்தநகர் பகுதிகளில் சுரங்கப்பாதை மூலம் மெட்ரோ வழித்தடம் என்று தெரிகிறது. மொத்தம் ரூ.8 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் இந்த பணிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டால் 4 ஆண்டுகளில் இது செயல்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

எப்படி இருக்கும்
அதேநேரம் சென்னையைப் போலவே மதுரையிலும் மெட்ரோ திட்டம் அமைக்கப்படுமா அல்லது மெட்ரோ லைட் போன்ற திட்டம் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை. இருப்பினும், மதுரையில் மெட்ரோ சேவை தொடங்கப்படும் போது, நிச்சயம் அது வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும். முதலீடுகள் பெருகி, பல தொழில் நிறுவனங்கள் உருவாகி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications