“என் மகன் இறந்து 9 நாளாச்சு.. சாவுக்கு யார் காரணம்னு கண்டுபிடிக்கணும்” தமிழ்ச்செல்வன் தாயார் கண்ணீர்
மதுரை: தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றக்கோரி இன்று மதுரை காவல் ஆணையரக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தனது மகன் இறந்து 9 நாள் ஆகிவிட்ட நிலையில், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என தமிழ்ச்செல்வனின் தாயார் கண்ணீருடன் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவன், 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற நிலையில், பின்னர் அவரது சடலம் முட்புதர் குட்டையில் இருந்து கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் உடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றக் கோரியும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரியும் தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்' சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர், உறவினர்கள் இன்று (செப்டம்பர் 14) மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்ச்செல்வனின் உறவினர் பெண் ஒருவர் ஆணையர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற நிலையில் அவரை போலீசார் பலவந்தமாக இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இறந்த மாணவன் தமிழ்ச்செல்வனின் தாயார் பேசுகையில், "என் மகன் இறந்து இன்றோடு ஒன்பது நாள் ஆகிவிட்டது. இன்னும் மார்ச்சுவரில் இருக்கிறான். அவன் ஒரு அப்பாவி. அவனைக் கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும்" என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
