15 கிலோ தங்கம் கொள்ளைக்கு முன்பே.. ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்.. நாய்கள் விரட்டியதால் எஸ்கேப்
மதுரை: மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள தனிஷ்க் ஜுவல்லரியில் சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளைக்கு முன்பே நள்ளிரவு 1 மணியளவில் ஸ்கூட்டியில் வந்து கடையின் பின்புறம் வேவு பார்த்த கொள்ளையனை நாய்கள் விரட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் அமைந்துள்ளது தனிஷ்க் நகைக் கடை. இந்த நகைக் கடை கடந்த மாதம் 14 ஆம் தேதிதான் திறக்கப்பட்டது. இந்தக் கடையில் கடந்த வியாழக்கிழமை காலையில் வழக்கம்போல ஊழியர்கள் திறந்துள்ளனர். அப்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் ஏராளமானவை காணமல் போனது தெரியவந்துள்ளது.

15 கிலோ தங்கம் கொள்ளை
இதுகுறித்து, மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சோதனை மேற்கொண்டதில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் நகைக் கடையில் லிப்டுக்காக அமைக்கப்பட்டிருந்த ஓட்டை வழிாக கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
நிறைவடையாத பணிகள்
இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. தீபாவளி விற்பனைக்காக கடையை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லிப்ட், பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டடத்தின் கட்டுமானப் பணிகளும் சில நடைபெற்று வருவதால் கட்டடத்தின் பின்புறம் இரும்பு சாரம் அமைக்கப்பட்டுள்ளது.
பக்கா ஸ்கெட்ச்
இந்த இரும்பு சாரத்தின் வழியாக மூன்றாவது தளத்துக்குச் சென்று, லிப்டு அமைக்கும் பணிக்காக போட்பட்டிருந்த துளை வழியாக கயிறு மூலமாக முதல் தளத்திற்குச் சென்றுள்ளார். பின்னர், முதல் தளத்தில் உள்ள நகைக் கடைக்குள் நுழைந்தது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. கருப்பு நிற ஆடை, மாஸ்க், கையுறை, ஷூ என பக்கா செட்டப்போடு வந்த கொள்ளையன் கடைக்குள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார். பின்னர், அந்த நகைப் பையுடன் நேதாஜி மெயின் ரோடு வழியாக நடந்து செல்வதும தெரியவந்துள்ளது.
வேவு பார்த்த கொள்ளையன்
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தனிஷ்க் ஜுவல்லர்ஸ் கொள்ளை வழக்கு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் நள்ளிரவு 1 மணியளவில் நகைக் கடைக்கு பின்புற பகுதிக்கு பதிவெண் இல்லாத ஸ்கூட்டியில் முகமுடியுடன் ஹெல்மெட் அணிந்தபடி வந்து கீழே இறங்கி வேவு பார்த்துள்ளார்.
அப்போது அங்கிருந்த நாய்கள் அவனைத் துரத்தியதும், அங்கிருந்து கொள்ளையன் தப்பியது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக நகை கடையின் பின்புறம் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். அந்த ஹார்ட் டிஸ்க்கை காவல் துறையினர் பறிமுதல் செய்து வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
