உங்க சர்டிஃபிகேட்ஸை தர மாட்றாங்களா? சான்றிதழ்கள் மீது யாருக்கும் உரிமையில்லை..உயர் நீதிமன்றம் அதிரடி
மதுரை: ஒருவரின் கல்விச் சான்றிதழின் மீது வேறு யாரும் உரிமை கோர முடியாது எனவும், கல்விச்சான்றிதழ்கள் விற்பனை பொருட்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவர் ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் பல்நோக்கு மருத்துவ படிப்பினை பயின்ற நிலையில் தன்னை கட்டாய பணி ஒப்பந்தத்தில் இருந்து விடுவிப்பதோடு, தனது அசல் சான்றிதழ்களை வழங்க உத்தரவிடுமாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் பல்நோக்கு மருத்துவ படிப்பினை 2024 பிப்ரவரி மாதத்தோடு நிறைவு செய்துள்ளார்.
சேவை சாரா படிப்பை பயின்றுள்ளார். படிப்பை நிறைவு செய்த பின் 2 ஆண்டுகள் கட்டாய ஒப்பந்த பணி செய்ய வேண்டும் என்ற விதி தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கோவிட் நோய் தொற்று காலத்தில் பணியாற்றியுள்ளார். அதனை கட்டாய ஒப்பந்த பணிக்காலமாக கருதி, சான்றிதழ்களை வழங்குமாறு கோருகிறார்.
ஏற்கனவே இது போன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சேவை சாரா படிப்பினை பயின்றாலும் அவர்களும் கோவிட் நோய் தொற்று காலத்தில் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றி இருக்கிறார்கள். ஆகவே அதனை கட்டாய ஒப்பந்த பணி காலமாக கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. ஆகவே கோவிட் நோய் தொற்று காலத்தில் ஆற்றிய பணியும் ஒப்பந்த பணியாக கருத்தில் கொள்ளலாம்.
மேலும் ஒருவரின் கல்விச் சான்றிதழின் மீது யாரும் உரிமை கோர முடியாது. கல்விச்சான்றிதழ்கள் சந்தை விற்பனை பொருட்கள் அல்ல. ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரியின் முதல்வர் மனுதாரரின் சான்றிதழ்களை 4 வாரத்திற்குள்ளாக வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications