திருப்பரங்குன்றத்தில் பொன்னுத்தாய்.. செல்லப்பா.. டேவிட் அண்ணாதுரைக்கு காத்திருக்கும் பெரும் சவால்
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னத்தாய் களம் இறங்கி உள்ளார். இவர் ஆட்டோ டிரைவரின் மனைவி ஆவார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர் சரவணன். இந்த முறை எப்படியும் தனக்கு தான் திருப்பரங்குன்றம் தொகுதி கிடைக்கும் என்று பெரும் நம்பிக்கையில் இருந்தார் சரவணன்.
ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி இந்த முறை திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வருத்தத்தில் இருந்த சரவணனுக்கு இந்த முறை சீட்டும் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த சரவணன், கடந்த ஞாயிறு அன்று திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் இணைந்த அன்றே அவருக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இதனிடையே மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக பொன்னுத்தாய் (46) அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநில குழு உறுப்பினர்
பொன்னுத்தாய் மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். இவரது கணவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவருக்கு ராகுல் என்ற மகன், இலங்கியா என்ற மகள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் 54 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறங்குகிறார்.

டாஸ்மாக் கடை
மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினரான பொன்னுத்தாய் +2 வரை படித்துள்ளார். மதுரையில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டங்களை முன்னின்று நடத்திய போராளி ஆவார். இவர் 1994ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்தார். இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்றியவர். பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறைகள் எதிர்ப்பு, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்ட 4 டாஸ்மாக் கடைகளை அகற்றுதல், தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டு பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி இருக்கிறார். திருப்பரங்குன்றம் பகுதி மக்களுக்கு நன்கு பழக்கமான முகமும் கூட.

டேவிட் அண்ணாதுரை
இதனிடையே திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். இது இவரது சொந்தத் தொகுதி என்பதால் கடந்தமுறை வெற்றிபெற்ற மதுரை வடக்கு தொகுதியிலிருந்து இந்தத் தொகுதிக்கு மாறியுள்ளார். இந்நிலையில் அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வாக்குகள் பிரியும்
டேவிட் அண்ணாதுரை ஏற்கெனவே அமமுக சார்பில் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 85,747 வாக்குகள் பெற்றவர். அண்ணாத்துரையின் தந்தை காளிமுத்து ஏற்கணவே இதே தொகுதியில் 1977, 1980ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று உள்ளார். அதிமுகவின் வாக்குகளை டேவிட் அண்ணாதுரை வலுவாக பிரிப்பார் என்பதால் அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதனிடையே கம்யூனிஸ்ட்கள் அதிகம் உள்ள தொகுதி மற்றும் திமுகவின் கூட்டணி பலம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வலுவான போட்டியை தரும். எனவே இந்த முறை அதிமுக, அமமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications