திருப்பரங்குன்றம் தீபத்தூண்! பிரிட்டிஷ் காலத்து வழக்கு முதல் திமுக, தவெக அரசுகள் வரை.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டின் ஆன்மீக மற்றும் அரசியல் வரலாற்றில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அதேபோல், மலையின் உச்சியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. இப்படி இரண்டு மதங்களின் வழிபாட்டு மையங்கள் ஒரே இடத்தில் அமைந்திருப்பது.. கேட்க வேண்டும் என்றால் மிகப்பெரிய சமூக நல்லிணக்க செய்தியாக தோன்றும்.. ஆனால் இதற்கு பின் உள்ள அரசியல் மோதல்கள்.. சட்ட சிக்கல்கள் கணக்கில் அடங்காதவை!

பல நூற்றாண்டுகளாக இரு மதத்தினரும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் வழிபட்டு வரும் இந்தப் புனிதத் தலத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் 'கார்த்திகை தீபம்' எங்கு ஏற்றப்பட வேண்டும் என்ற கேள்விதான் இந்த பிரச்சனைக்கு காரணம்! குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கே மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியல் போராட்டம் நடந்து வருகிறது.

Thiruparankundram

பிரிட்டிஷ் காலத்து மோதல்?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கிய இந்த நிலம் மற்றும் வழிபாட்டு உரிமைப் பிரச்சனை இன்றுவரை தீரவில்லை. கடந்த 2025-ம் ஆண்டின் இறுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புகளால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. இப்போது, 2026ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலிலும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

இப்போது இருக்கும் சூழலை பார்த்தால்.. பிரச்சனை இப்போதைக்கு முடிவிற்கு வருவது போல தோன்றவில்லை! வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்துள்ள வாதங்களும், அதற்கு எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் விமர்சனங்களும் தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் தற்போதைய உச்ச நீதிமன்ற விசாரணை வரையிலான முழுப் பின்னணியையும் இங்கே பார்க்கலாம்!

திருப்பரங்குன்றம் மலையின் பின்னணி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் அந்த மலையின் புவியியல் அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மலையின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலையின் பாதி உயரத்தில் 'உச்சிப் பிள்ளையார் கோயில்' அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள ஒரு மண்டபத்தில் உள்ள தீபத்தூணில்தான் பாரம்பரியமாகக் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலையின் உச்சிக்குச் சென்றால், இன்னொரு பக்கம் அங்கே சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் ஒரு பழமையான கல்தூண் உள்ளது. இதைத்தான் தீபத்தூண் என்று ஒருசாரர் வாதிடுகின்றனர்.

இந்தக் கல்தூணைச் சுற்றித்தான் ஒட்டுமொத்த சர்ச்சையும் சுழல்கிறது. சில இந்து அமைப்புகளும் பக்தர்களும், மலையின் உச்சியில் தர்காவுக்கு அருகே உள்ள அந்தக் கல்தூண்தான் உண்மையான தீபத்தூண். முன்பு அங்கேதான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.. அதாவது வரலாற்று ரீதியாக அதுதான் தீபத்தூண்.. எனவே மீண்டும் அங்கேயே தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும், அந்தக் கல்தூண் ஆங்கிலேயர் காலத்தில் நில அளவைக்காக நடப்பட்ட சர்வே கல் மட்டுமே. கடந்த 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. தர்காவுக்கு மிக அருகில் தீபம் ஏற்றினால் இரு சமூகத்தினர் இடையே தேவையற்ற பதற்றமும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படும், என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்போது பிரச்சனை உங்களுக்கு புரிந்து இருக்கலாம்.. ஆனால் இதில் வேறு ஒரு வரலாறும் உள்ளது..

Thiruparankundram

வரலாற்றுப் பின்னணி: பிரிட்டிஷ் காலத்து வழக்குகளும் 1923 தீர்ப்பும்

இந்தச் சர்ச்சை நேற்று இன்று தொடங்கியதல்ல. இதற்குப் பின்னால் 150 ஆண்டுகளுக்கும் மேலான சட்ட வரலாறு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம், எந்தப் பகுதி கோயிலுக்குரியது, எந்தப் பகுதி தர்காவுக்குரியது என்ற உரிமையியல் வழக்குகள் நீதிமன்றத்திற்குச் சென்றன.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாகப் பிரச்சினைகள் எழுந்தபோது, தர்கா நிர்வாகத்தினர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 1862 மற்றும் 1912-ம் ஆண்டுகளில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக உத்தரவுகள் பெறப்பட்டதாக அரசு தரப்பு ஆவணங்கள் கூறுகின்றன.

1920-ம் ஆண்டில் திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் மதுரை சப்-கோர்ட்டில் ஒரு உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் கோயிலுக்கே சொந்தமானது என்று அறிவிக்கக் கோரி இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. 1923-ம் ஆண்டு இந்த வழக்கில் முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த 1923-ம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலையின் பெரும்பகுதி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கே சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், மலையின் உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள இடம், தர்காவுக்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகள் தர்கா நிர்வாகத்தின் வசம் இருக்கும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னாளில் இந்தத் தீர்ப்பை லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலும் உறுதி செய்தது.

சுதந்திரத்திற்குப் பிறகும், 1990களில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனப் போராட்டங்களை நடத்தின. இது தொடர்பான வழக்குகளில் 1996, 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில், பாரம்பரியமாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றும் நடைமுறையையே தொடர வேண்டும் என்றும், கோயில் நிர்வாகம் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

2025 திமுக ஆட்சிக்காலத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு

பல ஆண்டுகளாக அமைதியாகச் சென்று கொண்டிருந்த இந்த விவகாரம், 2025-ம் ஆண்டு இறுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய அரசியல் மற்றும் சட்டப் புயலாக வெடித்தது. இந்து தமிழர் கட்சித் தலைவர் இராம. இரவிக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகே உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 2025 டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்பில் நீதிபதி கூறிய முக்கிய அம்சங்கள்,

1923-ம் ஆண்டு தீர்ப்பின்படி அந்தக் கல்தூண் அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானதுதான். தர்காவுக்குச் சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள அந்தத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதால் தர்காவின் வழிபாட்டு உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. பக்தர்களின் மத வழிபாட்டு உரிமையைக் காரணமின்றித் தடுக்க முடியாது; எனவே, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்ட பிறகும், 2025 டிசம்பர் 3-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவன்று, கோயில் நிர்வாகமும் மாவட்ட காவல்துறையும் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.

Thiruparankundram

We will face the consequences

மாறாக, வழக்கமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவுபிறப்பித்தது. இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் இராம. இரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் மற்றும் 10 பேர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்போடு சென்று தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். ஆனால், அப்போதும் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது. முக்கியமாக அங்கிருந்த போலீஸ் அதிகாரி We will face the consequences என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கோபமாக பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு விசாரணையின் போதுதான் அந்த பரபரப்பான சம்பவம் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை ஏன் அதிகாரிகள் மதிக்கவில்லை என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடுமையாகக் கேள்வி எழுப்பினார். அப்போது, பிரபல வார இதழ் ஒன்றில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, "நீதிமன்ற உத்தரவை மீறினால் நடவடிக்கை பாயுமே என்று கேட்டதற்கு, ஒரு காவல்துறை அதிகாரி மிகச் சாதாரணமாக விளைவுகளைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பேட்டியளித்திருப்பதாகப் படித்தேன். உயர் நீதிமன்ற உத்தரவை ஒரு சாதாரண ஆலோசனையாக அதிகாரிகள் நினைக்கிறார்களா? என்று கடும் அதிருப்தி தெரிவித்தார்.

இதற்கு அரசுத் தரப்பில், எந்த அதிகாரியும் அப்படி வேண்டும் என்றே பேசவில்லை.. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரம் நீதித்துறைக்கும் மாநில நிர்வாகத்திற்கும் இடையிலான நேரடி மோதலாகப் பார்க்கப்பட்டது.

நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மான முயற்சி

இந்தத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒரு சார்பாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர கையெழுத்து இயக்கம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து அப்போதைய திமுக அரசு, இந்து சமய அறநிலையத் துறை, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

2026 ஜனவரி 6-ம் தேதி, நீதிபதிகள் கோ. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. இராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கில் முக்கியத் தீர்ப்பை வழங்கியது:

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அந்தக் கல்தூண் ஆங்கிலேயர் காலத்து நில அளவைக் கல் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் நிராகரித்தனர். தீபம் ஏற்றுவதால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்ற வாதமும் ஏற்புடையதல்ல. திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தானம் மட்டுமே மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், என்று தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது.

இதற்கிடையில், 2026 ஜனவரியில் மலை உச்சியில் உள்ள முருகன் கோயிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பினர் பிறைக் கொடி ஏற்றியதாகப் புதிய சர்ச்சை எழுந்தது. இதையும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கோயில் மரத்தில் கட்டப்பட்ட கொடியை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்படி ஜனவரி 16-ம் தேதி அந்தக் கொடி அகற்றப்பட்டது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினர்.

தவெக அரசின் நிலைப்பாடும் இன்றைய உச்ச நீதிமன்ற வழக்கும்

2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது. புதிய அரசு வந்த பிறகு திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என்று இந்து அமைப்புகளும் பாஜகவும் எதிர்பார்த்தன.

ஆனால், ஆட்சிக்கு வந்த தவெக அரசும், முந்தைய திமுக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டையே உச்ச நீதிமன்றத்தில் எடுத்துள்ளதுதான் தற்போதைய மிகப்பெரிய அரசியல் திருப்பமாகும்.

வரும் நவம்பர் 24, 2026 அன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சிக்கந்தர் தர்கா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி முன்வைத்த வாதங்கள்:

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், கடந்த 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில்தான் ஆகம விதிகளின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இல்லாத ஒரு புதிய வழக்கத்தை நீதிமன்றம் உருவாக்கக் கூடாது.

1923-ம் ஆண்டு தீர்ப்பின்படி அந்தக் கல்தூண் கோயில் நிலத்தில் இருந்தாலும், அது சிக்கந்தர் தர்காவுக்கு மிக அருகில் உள்ளது. ஏற்கனவே 1996, 2014 ஆகிய ஆண்டுகளில் உயர் நீதிமன்றமே மலை உச்சியில் தீபம் ஏற்றக் கூடாது எனத் தீர்ப்பளித்துள்ளது. முடிந்து போன விஷயத்தை மீண்டும் கிளறுவது சட்ட விதிகளுக்கு எதிரானது.

தாதர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால், இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு பொது அமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, நவம்பர் 24-ம் தேதி தீபத் திருவிழா வருவதற்கு முன்பாக உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது என்றும், குகை மற்றும் கல்வெட்டுகளைப் பாதுகாப்பதைத் தாண்டி தொல்லியல் துறைக்கு அங்கு அதிகாரம் இல்லை என்றும் நவம்பர் 12-ம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தவெக அரசை விமர்சிக்கும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள்

உச்ச நீதிமன்றத்தில் தவெக அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு தமிழக அரசியலில் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக முந்தைய திமுக அரசு இந்துக்களின் வழிபாட்டு உரிமையைத் தடுத்தது. இப்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும், திமுகவின் அதே பாதையில் பயணித்து உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது கண்டிக்கத்தக்கது, என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் என்பது வெறும் ஒரு இடத்தில் விளக்கேற்றுவது தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல.. அது வரலாற்று ஆவணங்கள், வழிபாட்டு உரிமை, மத நல்லிணக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகிய நான்கு தூண்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் ஒரு தூணுக்காக நடக்கும் சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டு.. திமுக ஆட்சியில் தொடங்கி, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புகளால் சூடுபிடித்து, இன்று தவெக அரசின் உச்ச நீதிமன்ற வாதங்கள் வரை வந்து நிற்கும் இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கப்போகும் இடைக்கால உத்தரவே வரும் நவம்பர் 24-ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது... இந்த சர்ச்சையில் உங்களின் கருத்து என்பதை கீழே கமெண்டில் சொல்லவும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+