திருப்பரங்குன்றம்: “மகா தீபம் ஏற்றினால் அருகில் உள்ள தர்கா நிலை என்ன ஆகும்?” கோயில் நிர்வாகம் வாதம்!
மதுரை: "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பதால் மட்டுமே கல் தூணில் தீபம் ஏற்ற முடியாது. திருவண்ணாமலை போல இங்கேயும் பல நூறு மீட்டர் துணிகள், பல நூறு லிட்டர் நெய் பயன்படுத்தி தீபம் ஏற்றினால் எவ்வளவு வெப்பம் வெளிப்படும்? பக்கத்தில் உள்ள தர்காவின் நிலை என்ன ஆகும்?" என கோயில் நிர்வாகம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட் கிளை 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்தனர். மேலும் சில மனுக்களும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்தனர். மேலும் உண்மையிலேயே பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருக்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்துக்கு அருகே தர்கா உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என வாதம் வைத்தார்.
மேலும், தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் முடிவே தொடர வேண்டும். உத்தரவு பிறப்பித்த மூன்று நாட்களில் எவ்வாறு நிறைவேற்ற முடியும். மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில்தான் தீபம் ஏற்றுவதற்கு நிவாரணம் பெற முடியும். நீதிபதிகள், உச்சிப் பிள்ளையார் கோயில் தூணில் தீபம் ஏற்றினால் எல்லாரும் பார்க்க முடியும் என்பது சரியா? தீபம் விவகாரத்தில் தேவையில்லாத ஈகோ உருவாகிறது" என வாதம் வைத்தார்.
தொடர்ந்து கோயில் நிர்வாக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல" எனத் தெரிவித்தபோது, "அவை திருப்பரங்குன்றம் மலை தொடர்புடையதுதானே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து கோயில் தரப்பு வழக்கறிஞர், "கோயில் நிர்வாகத்தில் நீதித்துறை தலையிட முடியாது. திருப்பரங்குன்றத்தில் எந்த மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி குறிப்பிடவில்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல. கிரானைட் கல் தூண்தான். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், உண்மையிலேயே மலை உச்சியில் இல்லை. அந்தத் தூணில் விளக்கு ஏற்றினால் யாராலும் பார்க்க முடியாது.
தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை. 175 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை" என வாதம் வைத்தார்.
மேலும், ""உச்சியில் இருப்பதால் மட்டுமே கல் தூணில் தீபம் ஏற்ற முடியாது. திருவண்ணாமலையை எடுத்துக்கொண்டால், பல நூறு மீட்டர் துணிகள், பல நூறு லிட்டர் நெய் பயன்படுத்தப்படுகின்றன. இது போல, இங்கேயும் செய்தால் எவ்வளவு வெப்பம் வெளிப்படும்? பக்கத்தில் உள்ள தர்காவின் நிலை என்ன ஆகும்?" கோயில் நிர்வாகம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. அன்றைய தினம், எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications