9 உயிர்களை பலி வாங்கிய சுற்றுலா ரயில் தீ விபத்து.. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை
மதுரை: மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் பெட்டிக்குள் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி விசாரணை நடத்துகிறார்.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக பயணிகள் பலர் சுற்றுலா ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் நேற்று முன் தினம் இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை இந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி உத்தர பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஒரு ரெயில் பெட்டியை வாடகைக்கு பிடித்து 63 பேர் கொண்ட குழுவினர் தங்களுடன் 5 சமையல்காரர்களையும் அழைத்து வந்து இருக்கிறார்.
நேற்று காலை 5.15 மணி அளவில், அந்த குழுவினருடன் வந்த சமையல்காரர்கள் ரயில் பெட்டிக்கு உள்ளேயே ஓரிடத்தில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்து டீ போட்டுள்ளனர். அப்போது தான் சிலிண்டர் வெடித்து தீ பிடித்து விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் நாசேவேலை எதுவும் இல்லை எனறும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ரயிலில் தீ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே, ரயில் தீ விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று விசாரணை நடத்த உள்ளார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக மாநாட்டு அரங்கில் விசாரணை நடைபெறுகிறது.
இந்த விசாரணையின் போது மதுரை ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். தீ விபத்து தொடர்பாக ஏதேனும் விவரம் இருந்தால் ஆணையரிடம் தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications